இரவில் பச்சை நிறத்தில் ஒளிரும் அரிய வகை காளான் @ ஆனைமலை மானாம்பள்ளி வனச்சரகம்

மானாம்பள்ளி வனச் சரகத்தில் கண்டறியப்பட்ட, இரவில் பச்சை நிறத்தில் ஒளிரும் ‘பயோலுமினசென்ட்’ என்னும் அரிய வகை காளான்.
மானாம்பள்ளி வனச் சரகத்தில் கண்டறியப்பட்ட, இரவில் பச்சை நிறத்தில் ஒளிரும் ‘பயோலுமினசென்ட்’ என்னும் அரிய வகை காளான்.
Updated on
1 min read

வால்பாறை: உலகில் பல்லுயிர் வளம் மிக்க 8 இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்று. இங்கு 139 வகை பாலூட்டிகள், 5,000 வகையான பூக்கும் தாவரங்கள், 508 வகையான பறவைகள், 176 இருவாழ்விகள் உள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை அருகேயுள்ள மானாம்பள்ளி வனச்சரகத்தில் இருவாட்சி உள்ளிட்ட அரிய வகை பறவைகள், தாவரங்கள், விலங்குகள் உள்ளன. பல்லுயிர் வளம் மிக்க இந்த உருளிக்கல் வனப்பகுதியில் ‘பயோலுமினசென்ட்’ என்ற இரவில் ஒளிரும் காளான்கள் நிறைந்து காணப்படுகின்றன.

மிதமான தட்பவெப்பத்தில் வளரும் இந்த வகை காளான்கள், இரவு நேரத்தில் பச்சை நிறத்தில் ஒளிரும் தன்மை கொண்டவை. இதை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் வனத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு, தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வனம் வளம் நிறைந்ததாக இருப்பதையே இது உணர்த்துகிறது என்று இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மானாம்பள்ளி வனச்சரகர் கிரிதரன் கூறியதாவது: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரகத்தில் அரிய வகை தாவரங்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, காளான்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்தியாவில் 125 வகை காளான்கள் உள்ளன. மானாம்பள்ளி வனத்தில் ‘பயோலுமினசென்ட்’ என்ற அரிய வகை காளான்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வன உயிரின ஆர்வலர் பிரவீன் சண்முகானந்தம் இதை புகைப்படம் எடுத்துள்ளார். இந்த வகை காளான்களை இந்தியாவில் மட்டுமின்றி, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள நாடுகளிலும் காணமுடியும். இந்தக் காளான்கள் இரவு நேரத்தில் ஒளிரும் தன்மை கொண்டவை. இதில் விஷத்தன்மை இல்லை. இதுதவிர, வால்பாறை வனப் பகுதியில் நாய்க்குடை காளான், முட்டை காளான், சிப்பிக்காளான், பட்டன் காளான், பீச் காளான் உள்ளிட்ட பல காளான் வகைகள் பாறை இடுக்குகளிலும், வனப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in