

கோவை: கோயம்புத்தூர் அருகே உடல்நலக்குறைவால் உயிரிழந்த யானையின் வயிற்றில் 15 மாத குட்டி மற்றும் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.
கடந்த மே 17-ம் தேதி பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்குப் பகுதியில் பெண் யானை ஒன்று உடல்நிலை பாதிப்புடன் நின்றிருந்தது. யானையின் அருகே அதன் குட்டி யானையும் நின்றிருந்தது. யானையின் உடல்நிலைப் பாதிப்புக்கு வனத் துறையினர் சிகிச்சை அளித்தனர். மறுநாள் அதே இடத்தில் தாய் யானை மயங்கி விழுந்தது. வனத் துறையினர் அந்த யானைக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். கிரேன் மூலம் பெல்ட்டால் தூக்கி நிறுத்தப்பட்டு, தற்காலிக தொட்டியில் நீர் நிரப்பி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
வனக் கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், சதாசிவம், சுகுமார், மேகமலை புலிகள் காப்பக மருத்துவர் கலைவாணன் மற்றும் மருத்துவர் முத்துராமலிங்கம் ஆகியோர் சிகிச்சையை மேற்பார்வையிட்டனர். இந்நிலையில், நேற்று (மே 20) சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது. அதன் உடற்கூறாய்வில், யானையின் வயிற்றில் 15 மாத வளர்ச்சி அடைந்த குட்டி இருந்ததும், அத்துடன் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளும், புழுக்களும் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“வனப் பகுதிகளில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளையும் சேர்த்தும் உண்ணும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்களால் வன விலங்குகளின் உயிருக்கே ஆபத்தான சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே, வனப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதையும், பாட்டில்கள் வீசப்படுவதையும் தடுத்து நிறுத்த வனத் துறையினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.