குப்பைமேடாக மாறி வரும் மேற்கு தொடர்ச்சி வனம்: பிளாஸ்டிக் கழிவுகளை விழுங்கி உயிரிழக்கும் யானைகள்

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்
Updated on
2 min read

கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்ளும் யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் உயிரிழந்து வருகின்றன. இதைத் தடுக்க தமிழக அரசு, மலையடிவாரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவுக்கு குப்பை கொட்ட தடை விதிக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளன. ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் கொட்டப்படுகின்றன. இதனால் உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறும் யானைகள், காட்டுப்பன்றிகள், மான்கள் ஆகியவை குப்பைக் கிடங்கில் கிடக்கும் பொருட்களை உட்கொள்கின்றன.

இதனால், யானைகள், காட்டுப்பன்றிகளின் எச்சத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்து இருப்பது தெரியவந்தது. அப்பகுதியைச் சேர்ந்த வன விலங்கு ஆர்வலர்கள் மற்றும் வனத்துறையினர் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மருதமலை அடிவார வனப்பகுதியில் கடந்த மே 17-ம் தேதி உணவு உட்கொள்ள முடியாத நிலையில் மயங்கி விழுந்த யானைக்கு தொடர் சிகிச்சை அளித்தும் உயிரிழந்தது.

மருதமலை அடிவார வனப்பகுதியை ஒட்டிய பகுதி குப்பைக் கழிவுகள் கொட்டும் இடமாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் உணவு தேடி வரும் யானைகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் குப்பை கழிவுகளில் கிடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டு வருகின்றன. இதுகுறித்து, ‘ஓசை’ அமைப்பின் தலைவர் காளிதாசன் கூறும்போது, “மேற்கு தொடர்ச்சி மலை வனத்தை ஒட்டிய பகுதிகளில் குப்பையை உள்ளாட்சி அமைப்புகள் தான் கொட்டி வருகின்றன. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தோம்.

வனத்தையொட்டிய பகுதிகளில் குப்பையை கொட்டுவது பெரிய தவறு. தற்போது உயிரிழந்துள்ள யானையை போல பல யானைகள் வனப்பகுதிகளுக்குள் உயிரிழந்திருக்க கூடும். குட்டியுடன் வந்த தாய் யானை நோய்வாய்ப்பட்டிருப்பதற்கு உணவு தான் பிரச்சினையாக இருந்திருக்கிறது. இனிமேலும் வனத்தையொட்டிய பகுதிகளில் குப்பையை கொட்டுவது தொடர்ந்தால் யானை போன்ற உயிரினங்கள் இழப்புக்கு மாவட்ட நிர்வாகம்தான் காரணமாக இருக்கும். எனவே, மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் தலையிட்டு குப்பை கொட்டுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்றார்.

வன உயிரின ஆர்வலர்கள் கூறும்போது, “வனத்தையொட்டிய பகுதி முழுவதும் குப்பை கொட்டும் இடமாக மாறிக் கொண்டிருக்கிறது. எத்தனை யானைகளை உயிர் பலியாக தரப்போகிறோம் என்பதை அரசு சிந்திக்க வேண்டும். மருதமலை அடிவார வனப்பகுதி முழுவதும் உள்ள யானையின் எச்சங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கிடக்கின்றன. இதனால் யானை எளிதில் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

வனப்பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவு வரை குப்பையை கொட்ட தடை விதிக்க வேண்டும். குப்பை கொட்டுவோருக்கு மாவட்ட நிர்வாகம் அபராதம் விதிக்க வேண்டும். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆலோசித்து வருகிறோம்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in