

தேனீக்கள் மகரந்தச் சேர்க்கையால்தான் விவசாயத்தில் மகசூலே கிடைக்கிறது. தேனீக்கள் இல்லையென்றால் உலகின் உணவு உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்படும். உலகில் தேனீக்கள் இல்லாமல் போனால் உயிரினங்களின் சூழலியல் சுழற்சி கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக மனித குலமே அழிய வாய்ப்புண்டு என்பதால் ‘தேனீக்கள் இன்றி அமையாது உலகு’ என்கின்றனர் சுற்றுச்சூழல் அறிஞர்கள்.
விவசாயம், சுற்றுச்சூழல் என மனித வாழ்வுக்கு உதவியாக உள்ள தேனீக்களை பாதுகாக்க வலியுறுத்தி 2016-ம் ஆண்டு தேனீ வளர்ப்போர் சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பான அபிமோண்டியா மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உதவியுடன் ஸ்லோவேனியா குடியரசால், மே 20-ம் தேதி உலக தேனீக்கள் தினமாக கடைபிடிப்பதற்கான பரிந்துரை செய்யப்பட்டது. மே-20 தேதி, நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடியாகக் கருதப்படும் அன்ரன் ஜான்ஸாவின் பிறந்த நாள் என்பதால், ஐக்கிய நாடுகள் பொதுசபையானது 2018-ம் ஆண்டு மே 20-ம் தேதியை உலக தேனீக்கள் தினமாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று அழிந்துவரும் தேனீக்களை பாதுகாக்க உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
இது குறித்து பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த தேனீ வளர்ப்பு விவசாயி விவேகானந்தன் கூறியாதாவது: தேனீக்கள் இயற்கையை சமநிலையாக வைத்துக்கொள்வதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அவை உற்பத்தி செய்யும் தேனானது பல விதங்களில் சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேனீக்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி மனித வாழ்க்கைக்கும் பேருதவியாக இருக்கின்றன.
குறிப்பாக, விவசயிகளுக்கு இவை செய்யும் உதவி அளப்பரியது. தேனீக்களின் வாழ்க்கை முடிகிறதெனில் மனித இனத்தின் அழிவும் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறவாதீர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தேனீக்களின் இயற்கை எதிரிகளாக உள்ள எறும்பு, குளவிகள், பல்லி, ஓணான், பறவைகள், கரடி ஆகியவை தேனீக்களை தனது உணவாக உட்கொள்பவை. ஆனால் பூச்சிக்கொல்லிகள், காடு அழிப்பு, உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, தட்பவெட்ப நிலை மாற்றத்திற்குக் காரணமான சூழல் மாசுபாடு போன்ற மனித செயல்பாடுகளும் தேனீக்கள் அழியக் பெரும் காரணமாக மாறி வருகின்றது.
வீட்டில் உள்ள அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கு தேனீக்களின் நன்மைகள், வளர்ப்பு, அதன் தேவையின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுங்கள். இதனால் அடுத்த தலைமுறையும் தேனீக்களை வளர்க்க, பாதுகாக்க முன்வருவார்கள். தேனீ வளர்ப்பால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்பதால், தமிழகத்தில் தென்னை விவசாயம் அதிகம் நடைபெறும் கோவை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தென்னந்தோப்புகளில் தேனீப் பெட்டிகள் மூலம் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனீ வளர்ப்பு தொழில் வளர்ச்சி அடைய தேனீ வளர்ப்போருக்கு நல வாரியம் அமைக்க வேண்டும். கள்ளச்சந்தையில் போலியான தேன் விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேன் மெழுகு கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை உருவாக்கி தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
| இன்று - மே 20: உலக தேனீக்கள் தினம் |