

மன்னார் வளைகுடா கடலில் மூழ்கும் காரைச் சல்லி தீவை மீட்க உலக வங்கி ஆதரவுடன் ரூ.50 கோடியில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தனுஷ்கோடியிலிருந்து தூத்துக்குடி வரையிலும் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் புகழ்பெற்ற மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் அமைந்துள்ளது. இது தென்கிழக்கு ஆசியாவில் யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமை கொண்டது.
560 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பகத்தில் 0.25 ஹெக்டேர் முதல் 125 ஹெக்டேர் பரப்பளவிலான சிங்கில் தீவு, குருசடை தீவு, புள்ளிவாசல் தீவு, பூமரிச்சான் தீவு, மனோலி தீவு, மனோலி புட்டி தீவு, முயல் தீவு, முள்ளி தீவு, வாழை தீவு, தலையாரி தீவு, பூவரசன்பட்டி தீவு, அப்பா தீவு, வாலி முனை தீவு, ஆனையப்பர் தீவு, நல்லதண்ணி தீவு, புலுவினி சல்லி தீவு, உப்புத் தண்ணி தீவு, விலங்கு சல்லி தீவு, காரைச் சல்லி தீவு, காசுவார் தீவு, வான் தீவு ஆகிய 21 தீவுகள் அமைந்துள்ளன.
அரியவகை கடல்வாழ் உயிரினங்கள்: இந்த 21 மன்னார் வளைகுடா தீவுகளைச் சுற்றிலும் 104 வகை பவளப் பாறைகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் வசிக்கின்றன. குறிப்பாகப் பாலூட்டி இனங்களைச் சேர்ந்த ஆவுளியா என்று அழைக்கப்படும் கடல் பசு, ஓங்கில் என்று அழைக்கப்படும் டால்பின்களும் அதிகமாக இப்பகுதியில் காணப்படுகின்றன.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காணப்படக்கூடிய 13 வகையான கடல் புற்களை கடல் பசு, டால்பின், ஆமை, கடல் குதிரை உள்ளிட்டவைகளின் பிரதான உணவுகளாககும். மேலும் கடல் புற்களில் காணப்படும் நுண்ணுயிரிகள் மூலம் கடலின் சூழலியல் மண்டலம் சீராக இயங்க உதவுகிறது.
இந்த 21 தீவுகளில் 1969-ம் ஆண்டில் 20.85 ஹெக்டேர் அளவில் இருந்த காரைச் சல்லி தீவு 2018-ம் ஆண்டில் 5.97 ஹெக்டேராக சுருங்கி விட்டது. அதாவது கடலுக்கு அடியில் 71% நிலப்பரப்பு மூழ்கி விட்டது. இதே நிலை நீடித்தால் 2036-ம் ஆண்டில் காரைச் சல்லி தீவு முற்றிலுமாக மறையும் என நிபுணா்கள் எச்சரித்துள்ளனர்.
மன்னாா் வளைகுடாவில் உள்ள காரைச்சல்லி தீவை காப்பாற்ற தமிழக அரசு உலக வங்கி ஆதரவுடன் ரூ. 50 கோடியில் மீட்பு நடவடிக்கைகளை நிலையான பெருங்கடல் வளங்களைப் பயன்படுத்துதல் என்ற திட்டத்தின்கீழ் முன்னெடுத்துள்ளது.
காரைச் சல்லி தீவு மறுசீரமைப்புத் திட்டம் குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடல் அரிப்பை தடுக்க காரை சல்லி தீவைச் சுற்றி 2 ஏக்கா் முதல் 3 ஏக்கா் பரப்பளவில் ஐஐடி நிபுணர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்படும். மேலும் இந்த பகுதியில் கடல் புல் படுக்கைகள் தொழில்நுட்பங்கள் மூலம் மறு சீரமைக்கப்படும். இதன் மூலம் இந்த பகுதி வளமான கடல் வாழ்விடமாக மாறும் என்றனர்.