

திருச்சி/ கும்பகோணம்: இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷார், நம் நாட்டிலிருந்து ஏராளமான வளங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதை எதிர்த்து விடுதலைக்காக போராடியவர்களை ஆங்கிலேய அதிகாரிகள் துன்புறுத்தி இருந்தாலும், இந்திய மக்களின் நலனுக்காகவே பாடுபட்ட சில அலுவலர்களும் இருந்தனர். அவர்களில், முக்கியமானவர், தென்னகத்தின் நீர் மேலாண்மையை மேம்படுத்தியவரும், கல்லணையை கட்டிய கரிகால் பெருவளத்தானின் புகழை உலகுக்கு உரக்கச் சொன்னவருமான சர் ஆர்தர் தாமஸ் காட்டன்.
இவர், 1803-ம் ஆண்டு மே 15-ம் தேதி இங்கிலாந்து நாட்டின் செஸ் ஷைரில் ஹென்றி கால்வெலி காட்டனுக்கு, 10-வது மகனாக பிறந்தவர். பொறியியலில் ஆர்வம் கொண்ட அவர் தனது 15-வது வயதில் கிழக்கிந்திய கம்பெனியின் பொறியியல் பிரிவில் இணைந்தார். 1821-ல் சென்னையில் உள்ள தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தார். பின்னர், 1822-ல் ஏரி பராமரிப்பு துறையில் கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு உதவியாளராக பணி நியமனம் செய்யப்பட்டார்.
இதனால், கோவை, மதுரை, நெல்லை, தஞ்சை மாவட்டங்களில் உள்ள ஏரி, கண்மாய், குளங்களைப் பராமரித்து நீர் விநியோகம் செய்யும் வாய்ப்பு காட்டனுக்கு கிடைத்தது. தொடர்ந்து பல பதவிகளை வகித்த அவர் சென்னை மாகாண பொதுப் பணித் துறையின் தலைமை பொறியாளராகப் பதவி உயர்வு பெற்றார். பின்னர், 1829-ல் காவிரி பாசனப் பகுதிக்கு தனிப் பொறுப்பாளராக இவரை நியமித்தது ஆங்கிலேய அரசு. மணல் மேடுகளால் நீரோட்டம் தடைப்பட்டு பயனற்று இருந்த கல்லணையில் சிறு பகுதியை பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார்.
கல்லணையின் அடித்தளத்தைக் கண்டு வியந்த அவர், கரிகாலச் சோழனின் அணைகட்டும் திறன் மற்றும் பாசன மேலாண்மையை உலகுக்கு எடுத்துரைத்தார். கல்லணைக்கு ‘பேரணை’ (கிரான்ட் அணைக்கட்) என்ற பெயரையும் சூட்டி மகிழ்ந்தார். ‘கல்லணை போல ஆழம் காண முடியாத மணற்படுகையில் எவ்வாறு அடித்தளம் அமைப்பது என்ற நுட்பத்தைத் பழந்தமிழர்களிடம் இருந்து அறிந்துகொண்டோம். இதைக் கொண்டு பாலங்கள், அணைக்கட்டுகள் போன்ற நீரியல் கட்டுமானங்களைக் கட்டினோம். எனவே, இந்த மகத்தான சாதனையைப் புரிந்த அந்நாளைய தமிழ் மக்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கொம்பு மேலணை: கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு காவிரியும், கொள்ளிடமும் பிரியும் இடமான முக்கொம்புக்கு வரும் தண்ணீர் கடலில் கலந்து விரயமாகிக் கொண்டிருந்ததைத் தடுக்க கொள்ளிடத்தில் தடுப்பணை (மேலணை) கட்டினார். பின்னர், கொள்ளிடம் ஆற்றில், 1840-ல் அணைக்கரை எனும் இடத்தில் கீழணையை முழுமையாகக் கட்டியதும் இவரே. இதனால் தண்ணீர் வீணாகி கடலில் சென்று கலப்பதைத் தடுத்து வீராணம் ஏரிக்குக் கொண்டு சென்று, அங்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரியிலிருந்து, சென்னை பெருநகர மக்கள் காவிரி நீர் பெற அடித்தளமிட்டவரும் ஆர்தர் காட்டன் தான்.
மேட்டூர் அணை: தஞ்சையில் வெண்ணாறு, வெட்டாறு முதலியவற்றில் தண்ணீர் முழுவதும் பாசனத்துக்கு பயன்படும் வகையில் திட்டங்களை வகுத்த காட்டன், அடுத்ததாக மேட்டூரில் அணை கட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். இதற்கான அனுமதி பெற மைசூர் சமஸ்தானத்துக்கு 1835-ல் சென்றார். ஆனால், அவரது கோரிக்கை முதலில் நிராகரிக்கப்பட்டது. இதனால் அம்முயற்சி தடைபட்டது. அவரது காலத்துக்கு பிறகு, 1925-ல் அவரது கோரிக்கை செயல்வடிவம் பெற்று, 9 ஆண்டுகால கட்டுமானத்துக்கு பின், 1934-ல் மேட்டூரில் அணை கட்டி முடிக்கப்பட்டது.
கோதாவரி கோரிக்கை: தமிழகத்தை போல, ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா நதியில் விஜயவாடாவிலும், கோதாவரி நதியில் தவளேஸ்வரத்திலும் அணைகளைக் கட்டி, ஆந்திரா பூமியை செல்வம் கொழிக்கும் மாநிலமாக மாற்றியவர் சர் ஆர்தர் காட்டன். இந்தியாவில் இருந்து இலங்கை வரை மேற்கொள்ளவிருந்த பாம்பன் திட்டமும், விசாகப்பட்டினம் துறைமுகம் போன்ற கடல்சார் திட்டங்களும் காட்டனின் கை வண்ணம் தான். கல்லணை தொழில்நுட்பத்தையே படிப்பினையாக கொண்டு, இந்தியாவை குறிப்பாக தென்னகத்தை வளமாக்கி நீர் மேலாண்மையில் மவுனப் புரட்சி செய்தவர் ஆர்தர் காட்டன். அவர் பல்வேறு போராட்டங்கள், அவமானங்கள், துயரங்களை சந்தித்து சாதனை புரிந்துள்ளார். 1899 ஜூலை 14-ம் தேதி தனது 96-வது வயதில் காலமானார்.
222-வது பிறந்த நாள் இன்று.. ஆர்தர் காட்டனின் 222-வது பிறந்த நாளான இன்று (மே 15) கல்லணையில் உள்ள அவரது சிலைக்கு விவசாயச் சங்கத் தலைவர் அயிலை சிவசூரியன், கல்லணையில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு விவசாய சங்க பூதலூர் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், அணைக்கரையில் அவரது படத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி, நீரத்தநல்லூரில் அவரது படத்துக்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் சுவாமிமலை சுந்தர.விமல்நாதன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
‘நீர் மேலாண்மைக்காக செய்யும் செலவால் என்ன பயன்? என்பது தற்போது சொல்ல முடியாது. வருங்கால தலைமுறையினர் அதை உணரும்போது தான் தெரியும்’ என்று கூறியவர் ஆர்தர் காட்டன். ஆம், அதுதான் நமது அரசுக ளுக்கு அவர் தரும் நற்செய்தி. மேலும், சர் ஆர்தர் காட்டன் பிறந்த நாளான மே 15-ம் தேதியை நீர்ப்பாசன மேலாண்மை தினமாகவும், அரசு விழாவாகவும் அறிவித்து, சென்னை பொதுப்பணித் துறை அலுவலகம் மற்றும் அவர் கட்டிய அணைக்கட்டுப் பகுதிகளில் அவருக்கு சிலைகள் அமைப்பதுடன், வருங்கால சந்ததியினர் அவரை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் முக்கொம்பில் அருங்காட்சியகம் அமைப்பதுதான் நாம் அவருக்கு செய்யும் பெருந்தொண்டாக அமையும்.
- எம்.கே.விஜயகோபால் / சி.எஸ்.ஆறுமுகம்