பண்ணவாடியில் வலசை பறவைகள் உயிரிழப்பு - சூழலியல் ஆர்வலர்கள் அதிர்ச்சி
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியான பண்ணவாடியில் வலசை பறவைகள் திடீரென உயிரிழந்து காணப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியான பண்ணவாடியில் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் முகாமிட்டு வருகின்றன. இந்தியாவின் இமயமலை, மத்திய ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலங்களில் ஏற்படும் அதிகளவு பனி தாக்கம், உணவு தட்டுப்பாட்டால், பறவைகள் வெப்ப மண்டல பகுதிக்கு வந்து செல்கின்றன.
அந்த வகையில், பண்ணவாடிக்கு அதிகளவிலான பறவைகள் வந்து செல்கின்றன. அதேபோல, தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள் பண்ணவாடிக்கு வந்து செல்கின்றன. இதனை கண்டு ரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து பறவை ஆர்வலர்கள் வந்து செல்கின்றனர். மேலும், பறவைகளை படம் பிடித்து பதிவு செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக, இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என பறவை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பண்ணவாடி பகுதியில் கடந்த சில நாட்களாக நீர்வாழ் பறவைகள் உயிரிழந்து காணப்படுவது, பறவை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பறவை ஆர்வலர் விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியதாவது: ‘பறவைகளின் சொர்க்கபுரி’ என்று பறவை ஆர்வலர்களால் பண்ணவாடி கொண்டாடப்படுகிறது. குளிர் காலங்களில் உள்ளூர் பறவை முதல் வெளிநாட்டிலிருந்து வலசை வரும் பறவைகள் உட்பட ஆயிரக்கணக்கான பறவைகள் வருகின்றன. பல அரிய வகை பறவைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஐரோப்பிய காடை, பாடும் வானம்பாடி, மழைக்காடை, ஐரோப்பிய பனங்காடை, ஹேரியர்ஸ் போன்றவை தமிழ்நாட்டுக்கே அரிய வகை பறவையாகும். இந்த பறவைகள் ஆண்டுதோறும் பண்ணவாடிக்கு வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளை அரிவாள் மூக்கான், இராக்கொக்கு, சாம்பல் நாரை, குளத்து நாரை, பொரி உள்ளான், இந்திய தங்க மாங்குயில் உள்ளிட்ட பறவைகள் உயிரிழந்து காணப்படுகின்றன. வெள்ளை அரிவாள் மூக்கன் பறவையின் தலை மற்றும் கால் காணப்பட்டது; உடல் காணப்படவில்லை. இப்பகுதியில் மீன்வலைகளில் சிக்கி இறப்பது உண்டு. மேலும், மீன் பிடிக்கும் வெடி வைத்து பிடிக்கும் போது ஒரு சில பறவைகள் உயிரிழக்கின்றன. மேலும், ஒரு சில பறவைகள் உயிரிழந்து இருப்பதை பார்க்கும் போது வேட்டையாடப்பட்டதற்கான அறிகுறி தெரிகிறது.
எனவே, இயற்கை சமநிலையைப் பேணுவதில் பங்காற்றி, உணவுச் சங்கிலியில் முக்கிய அங்கம் வகிக்கும் பறவைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும். மேலும், பறவைகள் இறப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம், வனத்துறை, மீன் வளத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தன்னார்வலர்கள் குழுவை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
