

குன்னூர்: குன்னூரில் குடியிருப்பு அருகே முகாமிட்டிருந்த ஒற்றை காட்டு யானையை ட்ரோன் கொண்டு விரட்டியதால் ஊட்டி தொட்டபெட்டா சிகரம் பகுதிக்குள் வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதையில் தற்போது கோடை மழை பெய்ததால் பசுமைக்கு திரும்பியுள்ளது. இதனால் யானைகளுக்கு தேவையான உணவு எளிதில் கிடைப்பதால் சமவெளிப் பகுதிகளில் இருந்து குன்னூர் நோக்கி யானைகள் படையெடுத்து வருகின்றன. இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள கரிமரா ஹட்டி மற்றும் பழத்தோட்டம் பகுதியில் ஒற்றை யானை உலா வந்தது. பகல் நேரத்தில் தேயிலை தோட்டத்தில் சுற்றித் திரிவதால் தேயிலை தோட்டத்துக்குச் செல்ல முடியாமல் தொழிலாளர் அவதியடைந்தனர். மேலும், யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிலர் யானையை ட்ரோன் கேமரா மூலம் படம் பிடிப்பதாக கூறி, அதனை தொந்தரவு செய்துள்ளனர். ட்ரோன் கேமரா சத்தம் காரணமாக யானை திசை மாறி கிராமத்துக்குள் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வனத்தில் இருந்து திங்கள்கிழமை வெளியேறிய காட்டு யானை தொட்டபெட்டா செல்லும் சாலையில் உலவியது.
இதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர, யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 1 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு யானை வனத்துக்குள் விரட்டப்பட்டது. இதையடுத்து, வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.
இந்நிலையில், யானை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். யானை ஊட்டி குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு வலம் வந்தது. பின்னர் மீண்டும் தொட்டபெட்டா வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. தொட்டபெட்டா காட்சிமுனையில் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் உள்ளதால் இன்று ஒருநாள் தொட்டாபெட்டா காட்சிமுனைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது வனத்துறையினர் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறும்போது, “கடந்த 200 ஆண்டு கால ஊட்டி வரலாற்றில் முதல் முறையாக யானையைக் கண்ட மக்கள் மட்டுமின்றி வனத்துறையும் குழப்பத்தில் தடுமாறி வருகிறது. தொட்டபெட்டா வனத்தில் தஞ்சமடைந்திருக்கும் அந்த யானையை மீண்டும் அதன் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஒட்டுமொத்த வனத்துறையும் ஈடுபட்டு வருகிறது” என்றனர்.
பர்லியார் பகுதியில் காட்டு மரங்களை வெட்டுவதற்கும் பொக்லைன் ரக இயந்திரங்களை இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த காரணத்தாலேயே தற்போது ஊட்டிக்குள் யானைகள் நுழைந்திருக்கிறது. இந்நிலையில், யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வனப்பகுதியில் விடுவிக்க வனத்துறை அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது