

வண்டலூர் அருகே மாம்பாக்கம் ஊராட்சியில் ரூ.28.30 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட திரவக் கழிவு மேலாண்மை திட்டம் முறையாக பராமரிக்கப்படாததால் செயல்பாடின்றி முடங்கியுள்ளது. திருப்போரூர் ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சியில் நீர்நிலைகளில் கழிவுநீர் கலக்காமல் தடுக்கும் வகையில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 2021-22-ம் ஆண்டு 15-வது நிதிக்குழு மானியத்துடன் ரூ.28.30 லட்சம் மதிப்பில் திரவக் கழிவு மேலாண்மை திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
முதற்கட்டமாக 4 மற்றும் 6-வது வார்டில் உள்ள 250 வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை ஒரு நாளைக்கு 30 ஆயிரம் லிட்டர் வரை மறுசுழற்சி செய்யும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டது.
இந்த திட்டம் தமிழக ஊராட்சிகளில் முன்மாதிரி திட்டமாக செயல்பட்டு வந்தது. பல்வேறு மாநிலங்களில் இருந்து உள்ளாட்சி அதிகாரிகள் இங்கு வந்து பார்வையிட்டு இதன் செயல்பாடுகளை அறிந்து சென்றனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த திட்டம் ஒரு சில மாதங்கள் மட்டும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.
ஒன்றிய நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் முறையாக பராமரிக்காததால் தற்போது முடங்கியுள்ளது. ஏரியில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்காக திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், திட்டம் முடங்கியுள்ள காரணத்தால் மீண்டும் ஏரிகளில் கழிவுநீர் கலக்கிறது. மக்கள் வரி பணம் ரூ.28 லட்சம் வீணானதுதான் மிச்சம். அவ்வப்போது திருப்போரூர் ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் இத்திட்டம் பயன்பாட்டில் உள்ளதுபோல், உயர் அதிகாரிகளுக்கு படம் எடுத்து அனுப்பி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து மாம்பாக்கத்தை சேர்ந்த செல்வம் என்பவர் கூறியது: நீர் நிலைகள் நாளுக்கு நாள் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தினாலும் அதிகாரிகள் அதனை முறையாக செயல்படுத்துவதில்லை. இதற்கு உதாரணம் மாம்பாக்கம் ஊராட்சியில் ரூ.28.30 லட்சத்தில் அமைக்கப்பட்ட திரவக் கழிவு மேலாண்மை திட்டம் தான். ஊராட்சி நிர்வாகமும் ஒன்றிய நிர்வாகமும் சரிவர மேலாண்மை செய்யாததால் இந்தத் திட்டம் வீணடிக்கப்பட்டு தற்போது முடங்கியுள்ளது.
ஒன்றிய நிர்வாகத்துக்கும் ஊராட்சி நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் இந்த திட்டத்தை சரிவர பராமரிக்கவில்லை என தெரிகிறது. ஊராட்சித் தலைவரின் காசோலை அதிகாரம் பறிக்கப்பட்டதால் அவர் இதில் கவனம் செலுத்துவது இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு மீண்டும் திரவக் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.