கோப்புப்படம்
கோப்புப்படம்

ரூ.25 லட்சத்தில் சீரமைத்தும் பயனில்லை - பீர்க்கன்காரணை ஏரியில் மீண்டும் ஆக்கிரமித்த ஆகாயத் தாமரைகள்!

Published on

தாம்பரம் அருகே பீர்க்கன்காரணை ஏரியில் உள்ள ஆகாயத் தாமரைகளை ரூ.25 லட்சத்தில் அகற்றியும் பயனில்லை. மீண்டும் ஆகாயத் தாமரைகளால் ஏரி சூழப்பட்டுள்ளது. கழிவுநீர் கலப்பதை தடுத்தால் மட்டுமே ஆகாயத் தாமரை வளர்வதை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தாம்பரம் அருகே பீர்க்கன்காரணையில் நீர்வளத் துறைக்கு சொந்தமான சுமார் 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியில் பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், வண்டலூர் மலை ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் சேகரமாகிறது. இந்த ஏரியின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குடியிருப்புகளாக மாறிவிட்டன.

கடந்த 2019-ம் ஆண்டு ஜப்பான் நாட்டு நிதி உதவி திட்டத்தின்கீழ், ரூ.9 கோடியே 81 லட்சம் மதிப்பில் ஏரியை மேம்படுத்தும் பணி நடைபெற்றது. இதில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, நடைபாதை, பூங்கா, படகு சவாரி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல் வாகன நிறுத்துமிடம், பல்நோக்கு புல்வெளி, திறந்தவெளி திரையரங்குகள், ஆவின் பாலகங்கள், பொதுமக்கள் ஏரி கரைகளில் அமரும் வகையில் இருக்கை வசதி ஆகியவை ஏற்படுத்தப்படும் என்றும் ஏரிக்குள் பறவைகள் தங்கும் வகையில் மரங்கள் நடப்பட்டு ஏரியை சுற்றி பாதுகாப்பு வேலி, சுற்றுச்சுவர் அமைக்கப்படும் எனவும் நீர்வளத்துறையினர் தெரிவித்து பணிகளை மேற்கொண்டனர். ஆனால் அந்த பணியை முழுமையாக மேற்கொள்ளவில்லை. ஆக்கிரமிப்பு காரணமாக பணிகளை முழுமையாக முடிக்க முடியவில்லை என்றும் அரசியல்வாதிகள், வருவாய்த் துறையினரின் ஒத்துழைப்பு இல்லாததால் பணிகள் கிடப்பில் போடப்பட்டு விட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

அதேநேரத்தில் ஏரியில் கழிவுநீர் கலந்து தண்ணீர் மாசடைந்துவிட்டது. மற்றொருபுறம் முழுவதும் ஆகாய தாமரை வளர்ந்து ஏரி இருப்பதே தெரியவில்லை. இதையடுத்து நீர்வளத் துறையிடம் அனுமதி பெற்று ரூ. 25 லட்சம் செலவில் ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றும் பணியில் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது. இப்பணி அரைகுறையாக நடப்பதாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் மீண்டும் ஏரி முழுவதும் ஆகாயத் தாமரை படர்ந்துள்ளது.

தற்போது ஏரி, வீட்டு கழிவுகளால் நிறைந்து மாசடைந்து நிலத்தடி நீரும் கெட்டுப்போய், ஆகாயத்தாமரைகள் சூழ்ந்து காணப்படுகிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு கூடுதல் நிதி ஒதுக்கி ஏரியை புனரமைக்க முன்வர வேண்டும். ஏரியில் பல்லுயிர் பெருக்கத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர் புகழேந்தி கூறியது: ஏரியை பாதுகாக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. நீர்வளத் துறையினர் சீரமைப்பு பணியை தொடங்கி பாதியிலேயே விட்டுவிட்டனர். அதன் பிறகு தாம்பரம் மாநகராட்சி ரூ.25 லட்சத்தில் ஆகாயத்தாமரைகளை அரைகுறையாக அகற்றியது. தற்போது அந்த பணியும் பிரயோஜனம் இல்லாமல் ஏரி முழுமைக்கும் மீண்டும் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளது. தொடர்ந்து ஏரியில் வீடுகளின் கழிவு நீர் விடப்படுவதும், குப்பைகள் கொட்டப்படுவதும் ஆகாயத்தாமரை வளர்வதற்கு ஏதுவாக அமைகிறது. ஆகாயத்தாமரை படர்ந்து ஏரி நஞ்சாக மாறியுள்ளது. ஏரியில் கழிவுநீர் விடுவதை மாநகராட்சி நிறுத்த வேண்டும்.

அரசு இந்த ஏரியை கவனிக்கவில்லை எனில் காலப்போக்கில் ஏரி இருந்த இடமே தெரியாமல் போகும் நிலை ஏற்படும். தொடர்ந்து கழிவுகளால் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலையில் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களும் அதிகரித்து வருகிறது. நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி இணைந்து இந்த ஏரியை பாழாக்கிவிட்டனர். அவர்களது பணியை அவர்கள் முறையாக செய்திருந்தால் இந்த பிரச்சினை இல்லை. மழைக்காலம் நெருங்கும்போது மட்டும் ஆகாயத்தாமரையை அகற்றி விடுகின்றனர். அடுத்த ஒரு மாதத்திலேயே மீண்டும் ஆகாயத்தாமரை முளைத்து விடுகிறது. ஏரியை சீரமைக்க அரசு முன்வர வேண்டும். அரசு செவி சாய்க்கவில்லை எனில் நீதிமன்றத்தை அணுகுவதை தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in