

கழிவுநீர் ஓடையாக உருமாறி வரும் புழல் ஏரி உபரி நீர் கால்வாயால், புழல் ஊராட்சி ஒன்றிய பகுதிகள், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்று, புழல் ஏரி. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள இந்த ஏரி 18 சதுர கி.மீ. பரப்பளவில் செங்குன்றம். புழல், பம்மதுகுளம், சென்னை-அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரந்து விரிந்துள்ளது.
21.20 அடி உயரமும், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்ட புழல் ஏரி. வடகிழக்கு பருவமழையின்போது, மழைநீரால் முழு கொள்ளளவை எட்டும். அவ்வாறு முழு கொள்ளளவை எட்டும் போது, இரு மதகுகள் மூலம் உபரிநீர் வெளியேற்றப்படுவது வழக்கம். அவ்வாறு வெளியேற்றப்படும் உபரிநீர், புழல் ஏரி உபரிநீர் கால்வாய் மூலம் சென்னை-எண்ணூர் பகுதியில் வங்காள விரிகுடா கடலில் சேருகிறது.
இந்நிலையில், புழல் ஏரி உபரி நீர் கால்வாய், கழிவுநீர் ஓடையாக உருமாறி வருகிறது என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: மழைக்காலங்களில் புழல் ஏரியின் உபரிநீர், 13.5 கி.மீ. நீளமுள்ள புழல் ஏரி உபரி நீர் கால்வாய் மூலம் வெளியேற்றப்படுகிறது. அவ்வாறு வெளியேற்றப்படும் உபரிநீர் தண்டல்கழனி, வடகரை, கிராண்ட்லைன், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், மாத்தூர், கொசப்பூர், மணலி உள்ளிட்ட பகுதிகள் வழியாக, சென்னை-எண்ணூர் பகுதியில் கடலில் சேருகிறது.
இந்நிலையில், தண்டல்கழனி, வடகரை, கிராண்ட் லைன் என, புழல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இருந்து மழைநீர் வடிகால்வாய்கள் மூலமும், கால்வாயின் இரு கரையோரங்களில் உள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்பு களில் இருந்தும் புழல் உபரிநீர் கால்வாயில் கழிவுநீர் விடப்படுகிறது.
அதேபோல், காவாங்கரை-திருநீலகண்டநகர், பாலாஜி நகர், வடபெரும்பாக்கம், கொசப்பூர், ஆமுல்லைவாயல், சடையன்குப்பம் உள்ளிட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து மழைநீர் வடிகால்வாய்கள் வாயிலாகவும், கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் இருந்து நேரடியாகவும் கழிவுநீர் விடப்படுகிறது.
இப்படி, ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து பல ஆண்டுகளாக கழிவுநீர் விடப்படுவதால், ஆண்டு முழுவதும் கழிவு நீரால் பெருக்கெடுத்து ஓடுகிறது புழல் ஏரி உபரி நீர் கால்வாய். இதனால், இந்த கால்வாய் கழிவுநீர் ஓடையாக உருமாறி வருகிறது. கிராண்ட் லைன் உள்ளிட்ட பகுதிகளில் கால்வாயை ஆகாயத் தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன . இதனால், கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. மாசடைந்து வரும் நிலத்தடி நீரை பொதுமக்கள் பயன்படுத்துவதால், புழல் ஊராட்சி ஒன்றிய பகுதிகள், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.