

திருப்பூர்: திருப்பூர் நொய்யலில் சாயக்கழிவுநீர் வெளியேறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் தொடர்ச்சியாக கண்காணித்து நடவடிக்கையில் ஈடுபடுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனங்களுக்கு துணிகளில் நிறமேற்றி தர ஏராளமான சாய நிறுவனங்கள் உள்ளன. இந்த ஆலைகளில் இருந்து சாயக்கழிவு நீர் வெளியேறி நொய்யல் ஆறு மாசடைந்து வருவதால் பூஜ்ய நிலை சுத்திகரிப்பு முறையில் சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் சாய கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு, அந்த தண்ணீர் மீண்டும் பயன்படுத்தும் வகையிலும் சாயக்கழிவை திடக்கழிவாகவும் மாற்றி நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு கலக்காத வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில சாய ஆலைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல், இரவுநேரங்களில் நொய்யல் ஆற்றில் கலக்கின்றனர். அதிலும் மழை காலங்களில் இந்த போக்கு அதிகரித்திருப்பதை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலமுறை சுட்டிக்காட்டி உள்ளனர். இந்நிலையில் இன்று (ஏப். 3) திருப்பூர் தென்னம்பாளையம் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலந்து இளஞ்சிவப்பு நிறத்தில் நொய்யல் நீர் சென்றதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, “நொய்யல் ஆற்றில் முறைகேடாக சாயநீர் வெளியேற்றப்பட்டு, இளஞ்சிவப்பு நிறத்தில் நொய்யல் நீர் சென்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக இது குறித்து ஆய்வு செய்து சாயக்கழிவை வெளியேற்றும் ஆலைகள் மீது தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நொய்யலும், திருப்பூரின் நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும்.
தாமிரபரணி ஆற்றில் உயர்நீதிமன்றம் எத்தகைய கடுமையான உத்தரவுகளை வழங்கி உள்ளதோ, அதே உத்தரவுகளை தொழில் நகரமான திருப்பூரிலும் அமல்படுத்த வேண்டும். நொய்யலை காப்பாற்றுவது மட்டுமின்றி, நிலத்தடிநீரும் மாசடைந்தால் எதிர்காலத்தில் திருப்பூர் மாநகரம் வாழத்தகுதியற்ற நகரமாக மாறும். இதில் மாவட்ட நிர்வாகமும் கூடுதல் கவனம் செலுத்தி, மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வைத்தால் மட்டுமே இப்பிரச்சினைக்க்கு நிரந்தத்தீர்வு கிடைக்கும். இல்லையென்றால் தொடர்ச்சியாக சாயக்கழிவுநீர் முறைகேடாக வெளியேற்றுவதை தடுக்க முடியாத நிலைதான் ஏற்படும்” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.