

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருநீர்மலையில் உள்ள நாட்டு கால்வாய் மற்றும் ஏரி ஆகியவற்றை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர். இதனிடையே, இந்த பணிகளுக்காக ரூ.53 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நீர்வளத்துறையினர் அரசுக்கு கருத்துரு அனுப்பினர். ஆனால் அரசு பட்ஜெட்டில் ரூ.5.15 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திருநீர்மலையில் பெரிய ஏரி உள்ளது. 194.01 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி ஆக்கிரமிப்பால், 146.94 ஏக்கராக சுருங்கிவிட்டது. மேலும், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், பல ஆண்டுகளாக இதில் கலக்கிறது.
இதனால், ஏரி நீர் மாசடைந்து ஒட்டியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் கெட்டுவிட்டது. கரையில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து மூடிவிட்டன. குப்பை, கழிவுகள் கொட்டும் இடமாகவும் மாறிவிட்டது. மற்றொரு புறம் ஏரியில் ஆகாய தாமரை வளர்ந்து மூடிவிட்டது.
இதேபோல் திருநீர்மலை ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் சுப்புராயன் நகர், சரஸ்வதிபுரம் விரிவு, ரங்கா நகர் வழியாக செல்லும் நாட்டு கால்வாய் என்ற மழைநீர் கால்வாய் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது. மழை காலத்தில் திருநீர்மலை ஏரியின் உபரி நீர் நாகல்கேணி, பம்மல் பகுதிகளின் வெள்ளம் இக்கால்வாய் வழியாக ஆற்றுக்கு செல்கிறது. இக்கால்வாய் முறையாக பராமரிக்கப்படவில்லை.
இதனால், ஒவ்வொரு மழையின்போதும் வெள்ளம் ஏற்பட்டு சரஸ்வதிபுரம், சுப்புராயன் மற்றும் ரங்கா நகர் பகுதிகளை சூழ்ந்து விடுகிறது. 2015-ம் ஆண்டு இப்பகுதிகளில், 6 அடி உயரத்துக்கு வெள்ளம் தேங்கியது. ஒவ்வொரு மழையின்போதும் இப்பகுதிகள் பாதிக்கப்படுவதால் கால்வாய் முறையாக தூர்வார வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், அப்பகுதி குடியிருப்போர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், நாட்டு கால்வாய் விவகாரத்தில் முதல்வர் தலையிட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகவே அரசியல்வாதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் செயல்படுகின்றனர் என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் திருநீர்மலை ஏரி மற்றும் நாட்டு கால்வாயை சீரமைக்க ரூ.53 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏரியில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்றி, தூர்வாரி, பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வசதியுடன் கால்வாயை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு நீர்வளத்துறையினர் சார்பில் அரசிடம் நிதி கோரப்பட்டது. இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுமென எதிர்பார்த்தனர். ஆனால் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசு ரூ. ரூ.5.15 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதனால் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பா.சரவணன் கூறியதாவது: ரூ. 5.15 கோடி செலவில் ஏரியை ஆழப்படுத்தி சீரமைக்க பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரவேற்கிறோம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதேநேரத்தில் இந்த நிதியை கொண்டு திருநீர்மலை ஏரியை முழுமையாக சீரமைக்க முடியாது. எனவே அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இதுகுறித்து மீண்டும் பல்லாவரம் எம்எல்ஏவை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார். தற்போதுள்ள நிதியில், முக்கியமாக, நாட்டு கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்கவாட்டு சுவரை எழுப்பி பணிகளை மேற்கொள்ளலாம். இந்த நிதியை கொண்டு ஏரியை முற்றிலும் சீரமைக்க முடியாது. எனவே, இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய முன்வர வேண்டும் என்றார்.