

கூடலூர்: கூடலூர் வனக்கோட்டத்தில் 14 வகையான நீர்வாழ் பறவைகளில் 135-ம், 148 வகையான நிலவாழ் பறவைகளில் 3,023-ம் உள்ளதாக வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தெரிவித்தார்.
தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் மாநிலம் முழுவதும் மார்ச் மாதத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதன்படி 2025-ம் ஆண்டு மார்ச் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நீர்வாழ் பறவைகள், மார்ச் 15 மற்றும் 16-ம் தேதிகளில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்றன.
கூடலூர் வனக்கோட்டத்தில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு அறிவுரைப்படி, நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் 20 நீர்நிலைகளிலும், நிலவாழ் கணக்கெடுப்புப் பணிகள் 23 இடங்களிலும் நடைபெற்றன.
இதுகுறித்து கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறியதாவது: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பறவைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இக்கணக்கெடுப்பின்படி 14 வகையான நீர்வாழ் பறவைகளில் 135-ம், 148 வகையான நிலவாழ் பறவைகளில் 3,023-ம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
வேதிவால் குருவி, ஊர் மரங்கொத்தி, மயில், மைனா, மாடப்புறா, செம்போத்து, செம்மார்பு குக்குறுவான், கொண்டைக்குருவி, ஊதா தேன்சிட்டு, பச்சை குக்குருவான், கொண்டை வளத்தான், உண்ணிக்கொக்கு, வெண்மார்பு மீன் கொத்தி போன்ற பறவைகள் கண்டறியப்பட்டன. சாம்பல் மற்றும் மலை இருவாச்சி பறவைகளையும் காணமுடிந்தது, என்றார்.