

‘நீரின்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர். மனிதனின் அடிப்படைத் தேவையில் உணவு, உடை, உறைவிடம் முதன்மையானது. இதில் உணவு தயாரிக்கத் தேவையான உயிர் திரவம் நீர்தான். மனிதர்களுக்கு மட்டுமல்ல, பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ சுத்தமான நீர் மிகவும் அவசியம். நீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் தேவையும் அதிகரித்திருக்கிறது.
நீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி 1992ஆம் ஆண்டில் பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக் கான ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் ‘உலக நீர் நாளு’க்கான விதை இடப்பட்டது.
நீரின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் உலக மக்கள் அனைவரும் அறிந்துகொள்வதற்காக அந்த மாநாட்டில் ‘உலக நீர் நாள்’ என்கிற கருத்தாக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து 1993 மார்ச் 22 முதல் ‘உலக நீர் நாள்’ கொண்டாடப்பட்டு வருகிறது. அது ஏன் மார்ச் 22? ஏனெனில் மார்ச் 21 ‘உலகக் காடுகள் நாள்’ கொண்டாடப்படுகிறது.
அதை மனதில் கொண்டே மார்ச் 22 ‘உலக நீர் நாள்’ கொண்டாட முடிவானது. இயற்கையின் அருங்கொடைகளில் காடும் நீரும் ஒன்றோடு மற்றொன்று கலந்தது. இன்று பல்வேறு நதிகளில் பாய்ந்துகொண்டிருக்கும் நீர், காடுகள் வழியாகப் பயணித்துத்தான் நதியைச் சென்றடைகிறது!
இன்றைய சூழலில் கோடைக் காலத்தில் மட்டும் மனிதர்களுக்குத் தண்ணீர்ப் பற்றாக் குறை ஏற்படுவதில்லை. மழை பொய்த்துப் போனால் எல்லாக் காலத்திலும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. உலக அளவில் இன்று 5இல் ஒரு குழந்தை தண்ணீர்ப் பற்றாக்குறையால் அவதிப்படுகிறது.
ஆசியாவில் 15.5 கோடிக் குழந்தைகள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர் என்கின்றன தரவுகள். மனித இனம் எதிர்கொள்ளும் அபாயமாக இது உருவாகி வருகிறது. 2050க்குள் உலகில் 570 கோடிப் பேர் ஓராண்டில் ஒரு மாதம் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
எனவே, தண்ணீரை வீணாக் காமல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய தருணம் இது. தண்ணீர் கிடைக்கும்போது அதைச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். நம் வீட்டருகே உள்ள நீர் நிலைகளை மாசுபடுத்தாமல் அதில் தூய்மையான தண்ணீர் சேருவதை மனிதர்களாகிய நாம்தான் உறுதிசெய்ய வேண்டும். அது நிலத்தடி நீர் உயரவும் வழிவகுக்கும். 2025ஆம் ஆண்டு உலக நீர் நாளின் கருப்பொருள் ‘பனியாறுகள் பாதுகாப்பு’.