

ராமேசுவரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி பகுதியானது பூநாரை பறவைகள் சரணாலயமாக மாற்றப்படுவதுடன், வெள்ளிமலை, ஆழியாறு பகுதிகளுக்கு நவீன நீரேற்று மின் திட்டங்கள் ரூ.11,721 கோடியில் உருவாக்கப்பட உள்ளன.
தமிழகத்தின் மின் தேவை 2 மடங்கு உயரும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 2030-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் யூனிட் புதுப்பிக்கத்தக்க பசுமை ஆற்றலை (கிரீன் எனர்ஜி) உருவாக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக வெள்ளிமலை பகுதியில் 1,100 மெகாவாட் திறன் மற்றும் ஆழியாறு பகுதியில் 1,800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்று மின் திட்டங்கள் ரூ.11,721 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட உள்ளன.
நாள் முழுவதும் புதுப்பிக்கப்பட்ட சூரிய ஒளி மின்சாரம் வழங்கும் வகையில் 4,000 மெகவாட் திறன் கொண்ட மின்கலன் சேமிப்பு அமைப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக எரிசக்தி துறைக்கு ரூ.21,178 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் ரூ.70 கோடியில் 700 டீசல் பேருந்துகள், இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மாற்றப்பட உள்ளன. மலைப்ப குதிகளில் வாழும் மக்கள் பயனடையும் வகையில் 500 கி.மீ. நீளமுள்ள வனப்பகுதி சாலைகள் ரூ.250 கோடியில் மேம்படுத்தப்படும்.
பல்லுயிர் பெருக்கத்தை உறுதிசெய்யும் வகையில் வேட்டை பறவைகளின் வாழிடங்களைப் பாதுகாக்க ‘வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு’ ரூ.1 கோடியில் உருவாக்கப்படும். பூநாரை உள்ளிட்ட வலசைப் பறவைகள் இடம்பெயர்வதற்கான மத்திய ஆசிய பறக்கும் பாதையின் முக்கியப் பகுதியாக கருதப்படும் ராமேசுவரம் தனுஷ்கோடி பகுதியை, பூநாரை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் பகுதியில் வனச் சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுக்கும் வகையில், 1,000 ஹெக்டேர் பரப்பில் ரூ.10 கோடியில் பல்லுயிர் பூங்கா நிறுவப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.