

கோவை: கோவை மாவட்டத்தில் பணியின்போது காட்டு மாடு தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வனக்காப்பாளர் இன்று காலை உயிரிழந்தார்.
கோவை வனக்கோட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தோலம்பாளையம் மேற்கு சுற்றில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தவர் அசோக்குமார். நேற்று முன்தினம் மாலை வனப்பகுதியை விட்டு வெளியில் வந்து கிராமத்துக்குள் நுழைய முயன்ற காட்டு மாட்டை, வனப் பணியாளர்களுடன் சேர்ந்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, காட்டு மாடு தாக்கியதில் அசோக்குமாருக்கு மார்பு, இடுப்பு, வயிறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. வனப்பணியாளர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து, தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இன்று காலை 9.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட கிளை தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள், ஊழியிர்கள் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தி, அசோக்குமார் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.