Published : 10 Mar 2025 05:18 PM
Last Updated : 10 Mar 2025 05:18 PM
தமிழக வன ஆராய்ச்சி மையங்களில் ஆராய்ச்சிகள் நடைபெறாமல் முடங்கி உள்ளன. வனத்துறை உயரதிகாரிகளின் அலட்சியம் மற்றும் அரசு நிதி ஒதுக்காததால் இந்த பணிகள் நடைபெறவில்லை. ஊழியர்களும் சம்பளமின்றி பணியாற்றும் அவல நிலை உள்ளது.
தமிழகத்தில் மதுரை, திருச்சி, சென்னை, தருமபுரி, கோவை ஆகிய 5 இடங்களில் வன ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள தட்பவெப்ப சூழல், நிலத்தின் தன்மை, அங்குள்ள மாற்றங்கள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு புதிய திட்டங்களை ஆராய்ச்சி செய்து செயல்படுத்துவார்கள்.
குறிப்பாக புதிதாகமரக்கன்றுகளை உற்பத்தி செய்தல், மரங்கள் விரைவாக வளர்வதற்கும், நோய், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணிகளால் பாதிப்படையாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பவை குறித்து அவ்வப்போது ஆராய்ச்சி செய்வது இந்தமையங்களின் பணியாகும். மேலும் தட்பவெப்ப மாறுதலுக்கு ஏற்ற உயர் ரக மரக்கன்றுகளை வளர்த்தல், அவற்றை விவசாய நிலங்களில் நடுதல், புதிய தொழில்நுட்பங்களை புகுத்துதல் உள்ளிட்டவையும் இந்த மையங்களின் பணியாகும்.
இந்த மையங்களில் கடந்த, 2023-24, 2024-25 ஆகிய 2 ஆண்டுகளில் ஆராய்ச்சிக்கான நிதியை தமிழக அரசு ஒதுக்காததால் பணிகள் முடங்கியுள்ளதாக புகார் கூறப்படுகிறது. இதனால் ஆராய்ச்சி மையங்கள் தற்போது பொருட்காட்சிபோல காட்சி அளிப்பதாகவும், இங்கு, பணிபுரியும் 100-க்கும் மேற்பட்டோர் எந்த பணியுமின்றி அலுவலகத்துக்கு வருவதும், செல்வதுமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நவீன கால சூழலுக்கு ஏற்றதாகவும், நீடித்த வளர்ச்சி என்ற இலக்கிலும், வனம் தொடர்பான திட்டங்களை வனத்துறை உருவாக்கி வருகிறது.
இதற்கான கட்டமைப்பு வசதிகளுக்கான நிதி தேவை குறித்து, அரசுக்கு வரைவு அறிக்கை அனுப்புவதில் வனத்துறை உயர் அதிகாரிகள் காலம் தாழ்த்துவதால் ஆராய்ச்சி பணிகள் முடங்கி உள்ளன. அரசு இதனை சரி செய்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, 2023-24-ம் ஆண்டு ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு உரிய நேரத்தில் அனுப்பாமல், காலதாமதமாக அனுப்பப்பட்டதால் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
மேலும், 2024-25-ம் ஆண்டு அதே திட்டத்தை செயல்படுத்த அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதுவும் காலதாமதமாக முன் வைக்கப்பட்டதால், ரூ.7 கோடி வழங்குவது சாத்தியம் இல்லை என்றும் ரூ.3 கோடி மட்டுமே வழங்குவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கும் அறிக்கை அனுப்புவதில் வனத்துறை உயர் அதிகாரிகள் காலதாமதம் செய்தனர். இதனால் நிதி கிடைக்கவில்லை. இந்த ஆண்டாவது அரசு தலையிட்டு நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
3 மாத சம்பளம் இல்லை: தமிழகத்தில் உள்ள ஆராய்ச்சி மையங்களில் இளம் ஆராய்ச்சியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், தோட்ட பராமரிப்பாளர்கள், கணினி ஆபரேட்டர்கள், ஓட்டுநர்கள் என சுமார் 140-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. வனத்துறையின் நிர்வாக சீர்கேடால் ஊழியர்கள் சம்பளம் இன்றி தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இயற்கை நல ஆர்வலர் குமரன் கூறியதாவது: தமிழகத்தில் பசுமை பரப்பளவை அதிகரிக்க அரசு சார்பில் திட்டங்கள் தீட்டினாலும், அதை செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் பெரும்பாலான திட்டங்கள் தொடங்கிய நிலையிலேயே முடங்கி விடுகின்றன. தற்போது வனப்பகுதிகள் குறைந்து வருவதால் வெப்பமயமாதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றை குறைக்க வேண்டும் என்றால் இயற்கை சூழ்ந்த வனப்பகுதியை அதிகரிக்க வேண்டும்.
அதற்காக, புதிய ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும். ஆனால் 2 ஆண்டுகளாக நிதி ஒதுக்காமல் ஆராய்ச்சி மையங்கள் முடங்கி இருப்பது வேதனை அளிக்கிறது. அரசு சார்பில் இந்த ஆண்டாவது கூடுதல் நிதி ஒதுக்கி அதிகளவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வனத்தை பாதுகாக்கவும், விரிவாக்கம் செய்யவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், சில வனத்துறை உயர் அதிகாரிகள் சரிவர பணி செய்யாததால் இதுபோன்ற சூழல் ஏற்படுகிறது. தமிழகத்தில் உள்ள வன ஆராய்ச்சி மையங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய திட்டங்கள் செயல்படுத்த அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். என்ன ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
குறிப்பாக நிதியாண்டு தொடக்கத்தில் ஆராய்ச்சி பகுப்பாய்வு குழுவினர் கூட்டங்களை நடத்தி என்ன மாதிரி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று வனத்துறைக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள். அந்த குழுவில் அனைத்து துறை அலுவலர்களும் இடம்பெற்றிருப்பார்கள். இவர்கள் தரும் அறிக்கையை கொண்டு என்னென்ன மாதிரி ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும், அதற்குண்டான செலவினங்கள் உள்ளிட்டவை குறித்து வனத்துறை சார்பில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால், அறிக்கை கால தாமதமாக அனுப்பப்படுவதால் நிதி ஒதுக்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அரசு நிதி ஒதுக்க தயாராக இருந்தும், திட்டத்தை அரசின் கவனத்துக்கு முறையாக கொண்டு செல்வதில் வனத்துறை உயரதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், கடந்த 2 ஆண்டுகளாக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பல்வேறு நிலைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. எனவே அரசு இதில் தலையிட வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT