

முதுமலை: முதுமலையில் இரு புலிகள் உயிரிழப்பை அடுத்து அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் வித்யா கூறியது: “முதுமலை புலிகள் காப்பகம், நெலாக்கோட்டை வனச்சரகத்தில் இந்த வாரத்தில் இரண்டு புலிகள் உயிரிழந்தன. ஒன்று 5 வயதுடைய பெண் புலி. மற்றொன்று 10 வயதுடைய ஆண் புலி. முதுமலை புலிகள் காப்பகம் மூன்று மாநிலங்களின் முச்சந்தியில் அமைந்துள்ளதால் புலிகளின் எண்ணிக்கை அதிகம். மேலும், இந்த சரகம் வயநாடு வன உயிரின சரணாலயம் மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகம் மிக அருகாமையில் உள்ள பகுதியாகும். இம்மூன்று பாதுகாக்கப்பட்ட பகுதியிலிருக்கும் புலிகளின் நடமாட்டம் இச்சரகத்தில் தென்படும்.
அவ்வாறு அதன் எல்லைகளை தாண்டி வரும்போது புலிகள் ஒன்றோடொன்று சண்டையிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதம் என்பது புலிகளின் இனப்பெருக்க காலமாகும். பென்னை காப்புக்காட்டில் உயிரிழந்த 5 வயது பெண் புலி முதுமலை புலிகள் காப்பக கணக்கெடுப்புகளில் இதுவரை தென்படாத புலியாகும். இரு புலிகள் இறப்பிலும் அனைத்து உடற்பாகங்கங்களும் பிரேதத்திலேயே இருந்தன. முதற்கட்ட விசாரணையில் புலிகளின் இறப்புக்கு சந்தேகப்படும்படியான தடயங்கள் ஏதும் தென்படவில்லை என பிரேத பரிசோதனை செய்த மருத்துவ குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை அரசு சாரா தொண்டு நிறுவனம், கால்நடை பராரிப்புத்துறை கால்நடை மருத்துவர், கிராம பிரதிநிதி மற்றும் வயநாடு வனதுறையின் கால்நடை மருத்துவர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு தடயவியல் ஆய்வுக்காக மாதிரிகள் கோவை வட்டார தடயவியல் ஆய்வகத்திற்கும், சென்னையில் உள்ள உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் வன உயிரின குற்ற வழக்கும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்விடங்களை சுற்றி தொடர்ந்து கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்தி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது'' என்று அவர் கூறினார்.