

கூடலூர்: பென்னை காப்புக்காடு பகுதியில் ஆண் புலி ஒன்று இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. நெலாக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து 2 புலிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட நெலாக்கோட்டை வனச்சரகத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு பெண் புலி ஒன்று உயிரிழந்து கிடப்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர். அந்த புலியின் உடலை மீட்டு உடற்கூறாய்வு செய்து, மாதிரிகளை ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். புலிகளின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நெலாக்கோட்டை பகுதியில் இன்று (மார்ச் 6) காலை மேலும் ஒரு ஆண் புலி இறந்து கிடப்பதை கண்டறியப்பட்டது.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு வனத்துறையினர் தகவல் அளித்தனர். அதன் பேரில், முதுமலை புலிகள் காப்பகம், துணை இயக்குநர் அருண் தலைமையில், அரசு சாரா நிறுவன உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதி மற்றும் வனப்பணியாளர்கள் முன்னிலையில் முதுமலை புலிகள் காப்பாக வனக் கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ்குமார், வயநாடு வனக்கால்நடை உதவி மருத்துவர் அஜேஷ் மோகன்தாஸ், மாயார் கால்நடை உதவி மருத்துவர் இந்துஜா அடங்கிய மருத்துவ குழுவினரால் இறந்த புலியின் பிரேதத்துக்கு உடற் கூராய்வு மேற்கொள்ளப்பட்டது.
பிரேத பரிசோதனையில், உயிரிழந்தது சுமார் பத்து வயதுடைய ஆண் புலி. புலியின் உடலில் வேறொரு புலி தாக்கியதற்கான காயங்கள் இருந்தன. தலைப்பகுதியில் எலும்பு முறிவு காணப்பட்டது. மேற்கண்ட தடயங்கள் வேறொரு புலியுடன் சண்டையிட்டு இறந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. தடவியல் ஆய்வுக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மற்ற உடற் பாகங்கள் அனைத்தும் சம்பவ இடத்திலேயே எரியூட்டப்பட்டது.நெலாக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து 2 புலிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.