குஜராத்தில் 3,500 ஏக்கர் வனப் பகுதியை திறந்தார் பிரதமர் நரேந்திர மோடி

குஜராத்தில் 3,500 ஏக்கர் வனப் பகுதியை திறந்தார் பிரதமர் நரேந்திர மோடி
Updated on
2 min read

ஜாம்நகர்: குஜராத்தின் ஜாம் நகரில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் 3,500 ஏக்கர் பரப்பில் அடர்ந்த வனப்பகுதி உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இந்த வனப்பகுதியில் சிங்கம், புலி,யானை, காண்டாமிருகம் உட்பட 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள் வாழ்கின்றன.

குஜராத்தின் ஜாம் நகரில் ரிலையன்ஸ் குழுமத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்படுகிறது. இதையொட்டி சுமார் 3,500 ஏக்கர் பரப்பில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் அடர்ந்த வனப்பகுதி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வனத்தில் 200 யானைகள், 300 சிறுத்தைகள், சுமார் 300-க்கும் மேற்பட்ட சிங்கம், புலிகள், 1,000 முதலைகள், இரட்டை தலை பாம்பு உட்பட பல்வேறு வகைகளை சேர்ந்த பாம்புகள் மற்றும் பறவை இனங்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக சுமார் 2,000 வகைகளை சேர்ந்த 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள் அங்கு வாழ்கின்றன.

யானைகளுக்காக மட்டும் 600 ஏக்கர் ஒதுக்கப்பட்டு உள்ளது. யானைகளுக்காக சிறப்பு மருத்துவமனை செயல்படுகிறது. இதர உயிரினங்களுக்காக ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் அதிநவீன மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது. அங்கு எம்ஆர்ஐ, எக்ஸ்ரே, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை கூடம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன. கால்நடை மருத்துவர்கள் உட்பட 2,100-க்கும் மேற்பட்டோர் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த வனப்பகுதிக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை, வன்தாரா என்று பெயரிட்டு உள்ளது. ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்றது. அதற்கு முன்பாக 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜாம்நகரில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் 1,200-க்கும் மேற்பட்ட விஐபிக்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு முதல்முறையாக வன்தாரா வனப்பகுதி காண்பிக்கப்பட்டது.

இந்த சூழலில் குஜராத்தின் ஜாம்நகரில் வன்தாரா வனப்பகுதியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ம் தேதி அதிகாரப்பூர்வமாக திறந்துவைத்தார். இதில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானி, இளைய மகன் ஆனந்த் அம்பானி, அவரது மனைவி ராதிகா மெர்ச்சன்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வன்தாரா வனப்பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 7 மணி நேரம் முகாமிட்டிருந்தார். அப்போது சிங்கம், புலி, யானை, காண்டாமிருகம், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்களை அவர் பார்வையிட்டார். சிங்க குட்டிகளுக்கு பால் ஊட்டினார். யானைகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கு அவர் உணவு அளித்தார். இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்களை பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டார். அதோடு அவர் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

வன்தாரா வனப்பகுதியை திறந்துவைத்தேன். இது தனித்துவமான வனவிலங்கு சரணலாயம் ஆகும். இந்த வனத்தை உருவாக்கிய ஆனந்த் அம்பானியையும் அவரது குழுவினரையும் வாழ்த்துகிறேன். அமில வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு யானையை வன்தாராவில் பார்த்தேன். அந்த யானைக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில யானைகள் பார்வைத் திறனை இழந்துள்ளன. அவற்றை பாகன்கள் மிகுந்த அக்கறையுடன் கவனித்து கொள்கின்றனர். லாரி மோதியதில் படுகாயமடைந்த ஒரு யானைக்கும் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் ஜாம்நகரில் வன்தாரா வனப்பகுதியை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்துள்ள நிலையில் வெகு விரைவில் பொதுமக்களின் பார்வைக்காக வன்தாரா திறக்கப்படும் என்று ரிலையன்ஸ் அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வன்தாராவை உருவாக்கி, நிர்வகித்து வரும் ஆனந்த் அம்பானி கூறும்போது, “இந்து மதத்தில் கடவுளின் அவதாரங்களாக விலங்குகள் உள்ளன. நாம் கடவுளை நேரில் பார்க்க முடியாது. ஆனால் விலங்குகளுக்கு சேவை செய்வதன் மூலம் கடவுளுக்கு சேவை செய்ய முடியும். எனது சிறுவயது முதலே விலங்குகளை நேசித்து வருகிறேன். இதன்காரணமாகவே வன்தாரா வனப்பகுதியை உருவாக்கினேன்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in