

கோவை: கோவையில் ஒற்றை காட்டு யானையை விரட்ட வந்த இரு கும்கி யானைகளுக்கு மதம் பிடித்தததால் ஆனைமலை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சின்னத்தம்பி என்ற கும்கி யானை அழைத்து வரப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தடாகம், பன்னிமடை, சோமையனூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி செல்கின்றன. இதில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்த ஒற்றை யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஒற்றை யானையை இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து முத்து மற்றும் சுயம்பு ஆகிய இரு கும்கி யானைகள் கோவைக்கு கொண்டு வரப்பட்டன. இதனிடையே, கடந்த வாரம் சுயம்பு கும்கி யானைக்கு மதம் பிடிப்பது தெரியவந்தது. இதையடுத்து டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டன.
இந்நிலையில், முத்து யானைக்கும் மதம் பிடிப்பதற்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவரின் ஆலோசனையின்படி முத்து யானையும், டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கோவை வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் சுற்றி வந்த ஒற்றை யானையை விரட்டுவதற்காக சுயம்பு மற்றும் முத்து ஆகிய இரண்டு கும்கி யானைகளுக்கு மதம் பிடிப்பதற்கான அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இரண்டு யானைகளும் டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், டாப்சிலிப் முகாமில் நல்ல நிலையில் உள்ள சின்னதம்பி கும்கி யானை அழைத்து வரப்பட்டுள்ளது. தற்போது சின்னத்தம்பி கும்கி யானை வரப்பாளையம் பகுதியில் நிறுத்தப்பட்டு, ஒற்றை யானையை கண்காணித்து வருகிறோம்" என்றனர்.
கும்கியாக மாறி கோவை வந்த சின்னத்தம்பி: கோவை, தடாகம் அருகே விவசாய பயிர்களை சேதப்படுத்துகிறது என்ற விவசாயிகள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, கடந்த 2019-ல் சின்னத்தம்பி காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் ஆனைமலை பகுதியில் விடுவிக்கப்பட்டது.
ஆனால், விவசாய பயிர்களை சாப்பிட்டு பழகிய சின்னத்தம்பி யானை மடத்துக்குளம் வரை சென்று விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சாப்பிட தொடங்கியது. இதனால் வனத்துறையினர் சின்னத்தம்பி யானையைப் பிடித்து கும்கி யானையாக மாற்றினர்.
இந்நிலையில், தடாகம் பகுதியில் ஒரு காலத்தில் பயிர்களை சேதப்படுத்தி வந்ததாக விவசாயிகள் புகார் தெரிவித்து பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி யானை தற்போது கும்கியாக பயிற்சி பெற்று, மற்றொரு காட்டு யானையை விரட்டுவதற்காக முதல் முறையாக தடாகம் பகுதிக்கு வந்துள்ளது.