

சென்னை: தமிழகத்தில் உள்ள 2,961 யானைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வனத்துறை மற்றும் இந்திய வனவிலங்கு அறக்கட்டளை சார்பில் 2 நாட்கள் நடைபெறும் தமிழக யானை திருவிழா நிகழ்ச்சி சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று நிறைவடைந்தது. வனத்துறை அமைச்சர் பொன்முடி விழாவை தொடங்கிவைத்தார். இதில் யானை மற்றும் மனித மோதல் தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட வனத்துறையினரை கவுரவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வனப்பகுதிகளில் யானைகளை எப்படி பாதுகாப்பது, மனிதன்- யானை மோதலை தடுப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக இவ்விழா நடத்தப்படுகிறது. தேசிய அளவில் விலங்குகள் நல ஆர்வலர்கள் பங்கேற்று விவாதிக்கின்றனர். வனப்பகுதிகளில் இருந்து விலங்குகள் வெளியில் வருவதையும், வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க தமிழக அரசு சார்பில் மின்வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் வால்பாறையில் வனத்துறையின் எச்சரிக்கையையும் மீறி சென்ற ஜெர்மனி நாட்டவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். மனித - வன விலங்கு மோதலை தடுக்க மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகள்: வனத்துறை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 2,961 யானைகள் உள்ளன. அவற்றை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை வனத்துறை எடுத்து வருகிறது. பல காலமாக வனத்தை ஆக்கிரமித்து வருபவர்களை, வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். தாய் யானையுடன் இருக்கும் யானைக் குட்டிகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை செயலர் பி.செந்தில்குமார், வனத்துறை தலைவர் சீனிவாஸ் ரெட்டி, தலைமை வனப்பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா, இந்திய வனவிலங்கு அறக்கட்டளை தலைமை செயல் அலுவலர் ஜோஸ் லூயிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.