

உதகை: உதகையில் ஒரு மாதத்துக்குப் பின்னர் மீண்டும் உறைபனி பொழிவு தொடங்கியது. நீலகிரி மாவட்டம் உதகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை பனிக்காலம் நிலவுகிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக காலநிலை மாறுபாடு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. அந்த வரிசையைத் தொடர்ந்து தற்போது பனிக்காலமும் இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது.
கடந்த நவம்பர் மாதம் 22-ம் தேதி முதல் தொடங்கி ஒரு வாரம் வரை நீர் பனிப்பொழிவின் தாக்கம் இருந்தது. இதையடுத்து, நவம்பர் 25-ம் தேதி உதகையில் உறைபனி பொழிவு தொடங்கியது. இந்நிலையில், உறைபனி தொடங்கிய ஒரு வாரத்துக்குள் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. அதன் பின்னர் ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக உறைபனி குறைந்தது. மேலும் மாவட்டம் முழுவதும் பல இடங்களிலும் மழை பெய்தது.
இந்நிலையில், மீண்டும் டிசம்பர் மாதம் 25-ம் தேதி முதல் உறைபனி தாக்கம் தொடங்கியது. உதகை தாவரவியல் பூங்கா தலைக்குந்தா, படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், குதிரை பந்தயம் மைதானம் ஆகிய பகுதிகளில் அதிகாலை முதலே அதிக அளவில் பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது பனி கொட்டி கிடக்கிறது. இதனால் வனப்பகுதிகள் அதிகம் கொண்ட நீலகிரி காலையில் பசுமையாக தெரியும் நிலையில் வெண்மையாக காட்சியளித்தது.
தை மாதம் தொடங்கிய நிலையில் பனியின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் உறைப்பனி பொழிவு ஏற்பட்டது. உதகையில் காலை முதல் மாலை வரை வெப்பமான காலநிலை நிலவுகிறது. இரவு முதல் அதிகாலை வரை பனி அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதனிடையே உதகையில் நிலவும் கடும் குளிரிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிகளவில் கம்பளி ஆடைகளை அணிகின்றனர். மேலும் ஒரு சிலர் ஆங்காங்கே தீமூட்டி குளிர் காய்கின்றனர்.
உதகையில் நேற்று குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியஸ் அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. மார்கழி மாதம் முடிந்து தை மாதமும் முடிவடையும் நிலையில், உதகையில் உறைபனி பொழிவு ஏற்பட்டுள்ளது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.