

சென்னை: சேகூர் யானைகள் வழித்தட சொத்துக்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் சேகூர் பகுதியை யானைகள் வழித்தடமாக அறிவித்த தமிழக அரசு, ஊட்டி மற்றும் கூடலூர் பகுதிகளில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தனியார் வனமாக அறிவித்தது. சேகூர் பகுதியை யானைகள் வழித்தடமாக அறிவித்ததை எதிர்த்து தனியார் ரிசார்ட் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசின் உத்தரவை உறுதி செய்ததுடன், சேகூர் பகுதியில் உள்ள சொத்துக்கள் தொடர்பான ரிசார்ட் தரப்பு குறைகளை விசாரித்து ஆய்வு மேற்கொள்ள உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு, சேகூர் யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள நிலங்களை அரசு, தனியார் வனமாக அறிவித்த 1991-ம் ஆண்டுக்குப்பிறகு, அந்த பகுதியில் நிலங்கள் வாங்கி இருந்தால் அது செல்லாது என கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ரிசார்ட் உரிமையாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 6-க்கு தள்ளி வைத்துள்ளனர்.