பனிப்பொழிவால் முதுமலையில் வறட்சி: உணவு, தண்ணீர் தேடி இடம்பெயரும் வன விலங்குகள்!

முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதியில் உணவு தேடி கூட்டமாக சுற்றித்திரியும் மான்கள். | படம்: ஆர்.டி.சிவசங்கர் |
முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதியில் உணவு தேடி கூட்டமாக சுற்றித்திரியும் மான்கள். | படம்: ஆர்.டி.சிவசங்கர் |
Updated on
1 min read

முதுமலை: நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் இறுதியிலிருந்து பனி காலம் தொடங்கும். இந்த காலத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உறைபனி பொழியும். இதனால், தேயிலை செடிகள், காய்கறி செடிகள் மற்றும் புல்வெளிகள் கருகிவிடும்.

பனியிலிருந்து பயிர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபடுவார்கள். தேயிலை செடிகளின் மேல் தென்னை ஓலைகள், வைக்கோல் போட்டு பாதுகாப்பது வழக்கம். இந்தாண்டு, தாமதமாக கடந்த மாத இறுதியில்தான் பனிப்பொழிவு தொடங்கியது. காலை நேர வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச தட்பவெப்ப நிலை 3 டிகிரி செல்சியஸாகவும் உள்ளது.

உதகை, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், மசினகுடி, முதுமலை ஆகிய பகுதிகளில் பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தாவரங்கள், புற்கள் காய்ந்து வருகின்றன. இதனால், உணவு மற்றும் தண்ணீர் தேடி விலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன.

தற்போது ஓரளவு பசுமை உள்ள நிலையில், வரும் நாட்களில் பனிப்பொழிவு அதிகரித்து காப்பகத்தில் வறட்சி மேலோங்கி வனத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தற்போது காணப்படும் சில விலங்குகளும் இடம்பெயர்ந்துவிடும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. தற்போது வறட்சி நிலவுவதால் வனத்தீ ஏற்படாமல் இருக்க 610 கி.மீ. தூரத்துக்கு வனத்துறையினர் தீத்தடுப்பு கோடுகளை வெட்டி வருகின்றனர். தெப்பக்காடு வழியாக தேசிய நெடுஞ்சாலை-67 செல்வதால் இருபுறமும் 10 மீட்டர் அளவில் தீத்தடுப்பு கோடுகள் வெட்டப்பட்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in