

கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே தாளியூரில் அதிகாலை நடைபயிற்சி சென்ற வியாபாரி நடராஜ் ஒற்றை யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
கோவையை அடுத்த துடியலூர் தாளியூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (69). வியாபாரியான இவர் இன்று அதிகாலை அப்பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒற்றை யானை தாக்கியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீஸார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே ஒற்றை யானை தாக்கி வியாபாரி இறந்ததைத் தொடர்ந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், கும்கி யானைகளை கொண்டு யானையை விரட்ட வேண்டும் என விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வன அலுவலர் ஜெயராஜ் மற்றும் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் ஆகியோர் சமரச பேச்சு நடத்தி கும்கி யானைகள் மூலம் காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதனிடையே, கும்கி யானைகள் மூலமாக காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிகள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், முதன்மை தலைமை வனப்பாதுகாவலரும், தலைமை வன உயிரின பாதுகாவலருக்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து கும்கி யானைகள் மூலம் ஒற்றை யானையை விரட்ட முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டுள்ளாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் கந்தசாமி கூறும்போது, “கடந்த 2024-ம் ஆண்டு முதல் ஒற்றை யானை வனத்தை விட்டு வெளியேறி உணவு தேடி விவசாய நிலங்கள், குடியிருப்புப் பகுதிகளில் நடமாடி வருகிறது. இந்த யானை ஏற்கெனவே பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வயதான முதியவரை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 3 பேர் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். வனத்தை விட்டு வெளியேறி நடமாடி வரும் யானையை கண்காணிப்பதாக வனத்துறை கூறுகிறது. ஆனால், யானை தாக்கிய சம்பவத்தில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும், உயிரிழப்புகள் நிகழாத வகையில் ஒற்றை யானையை கும்கி யானைகள் உதவியுடன் பிடித்து இடமாற்றம் செய்திட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.