‘ஆமை நடை’ திட்டம்: கடல் ஆமைகளை பாதுகாக்க விரைவில் அறிமுகம்

தனுஷ்கோடி கடலில் விடப்படும் ஆமை குஞ்சுகள் (கோப்பு படங்கள்)
தனுஷ்கோடி கடலில் விடப்படும் ஆமை குஞ்சுகள் (கோப்பு படங்கள்)
Updated on
1 min read

ராமேசுவரம்: தமிழக கடற்கரை பகுதிகளில் கடல் ஆமைகளை பாதுகாக்க ‘ஆமை நடை’ திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த மன்னார் வளைகுடா உயிர்க் கோள காப்பகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. இவற்றின் திடீர் இறப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆமைகள் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் பட்டியலில் உள்ளன. அவற்றை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து, அதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பதற்கு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, ராமநாதபுரம் மாவட்ட மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் ஆமைகள் குறித்து விழிப்புணர்வு, ஆமை முட்டைகள் சேகரிப்பு, ஆமை குஞ்சுகளை கடலில் விடுவதற்கு தன்னார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் கூறியதாவது: ராமேசுவரத்திலிருந்து கன்னியாகுமரி வரை மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் அமைந்துள்ளது. இவற்றில் கடல் ஆமைகள் முட்டையிடும் இடமாக தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை, பாம்பன், குந்துகால், மண்டபம், புதுமடம், சேதுக்கரை, ஏர்வாடி, ஒப்பிலான், மூக்கையூர், கன்னிராஜபுரம், அரியமான் அழகன்குளம், ஆற்றங்கரை, புதுவலசை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் ஆமை குஞ்சு பொரிப்பகங்களில் வனத்துறையினர் ஆமை முட்டைகளை பாதுகாக்கின்றனர். அவை குஞ்சு பொறித்ததும் கடலில் விடுகின்றனர்.

கடல் ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆமை முட்டையிடும் பகுதிகளுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் 5 கடல் மைல்களுக்குள் மீன்பிடிப்பு செய்யாமல் இருப்பது, வலையில் ஆமைகள் சிக்கினால் எவ்வித பாதிப்புமின்றி கடலில் மீண்டும் விடுவது, கடலோரங்களில் ஆமைகள் நடமாட்டத்தை அறிந்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க மீனவர்களுக்கும், கடலோரப் பகுதி மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வனத்துறையினருடன், தன்னார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள், மீனவர்கள் இணைந்து பங்கேற்கும் ‘ஆமை நடை’ திட்டத்தை மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் விரைவில் தொடங்க உள்ளது. இந்த திட்டத்தில் இணையும் பங்கேற்பாளர்களுக்கு ஆமைகள் முட்டையிடும் பகுதிகளை பாதுகாப்பது, ஆமை குஞ்சுகளை மீண்டும் கடலுக்குள் பாதுகாப்பாக அனுப்ப உதவுவது, ஆமைகள் குறித்த விழிப்புணர்வை கடலோர மக்கள் மற்றும் மீனவர்களுக்கு ஏற்படுத்துவது ஆகிய பணிகள் தரப்படும். விருப்பமுள்ளோர் https://turtle.egg.vgts.tech/volunteer-interest என்ற இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in