

கோத்தகிரி: கோத்தகிரி அருகே கிணற்றில் விழுந்த இரண்டு கரடிகளை ஏணி வைத்து வனத்துறையினர் மீட்டனர்.
நீலகிரி வனக்கோட்டம், கோத்தகிரி வனச்சரகம், ஜக்கனாரை கிராமம், தும்பூர் என்ற குக்கிராமத்துக்கு அருகிலுள்ள கிணற்றில், இரண்டு கரடிகள் விழுந்து, தண்ணீரில் தத்தளிப்பதாக இன்று (சனிக்கிழமை) காலை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக கோத்தகிரி வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
ஜக்கனாரை கிராம ஊராட்சிக்குச் சொந்தமான ஆழமான கிணற்றின், மேல்பாகம் கான்கிரீட்டால் முழுமையாக மூடப்பட்டுள்ளது. அதிலுள்ள திறப்பு வழியாக கரடிகள் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளன. கிணற்றிலுள்ள அவை தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக வனத்துறையினர் இரண்டு ஏணிகளை இணைத்து, கிணற்றுக்குள் வைத்து கட்டிய பின்பு, மதியம் சுமார் 1.45 மணியளவில், அந்த ஏணி வழியாக இரண்டு கரடிகளும் ஒன்றன் பின் ஒன்றாக மேலே ஏறி, கிணற்றுக்கு வெளியில் வந்தது. தொடர்ந்து தேயிலை தோட்டம் வழியாக புதர் பகுதிக்குள் பத்திரமாகச் சென்றுவிட்டன.
கரடிகள் இரண்டையும் வனப் பகுதிக்குள் அனுப்பும் பணியில் கோத்தகிரி வனத்துறையினர் ஈடுபட்டனர்.