

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும், கருத்துகளும் சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியிருக்கிறது. 40 வயதுக்கு மேலான கோயில் யானைகளை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்துகிறார்கள்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் இருந்த பெண் யானை காந்திமதி, விழா காலங்களில் பூஜைகளில் பங்கேற்கும் அழகை பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர். மற்ற கோயில் யானைகளை விட அழகான உருவத்துடன் காணப்பட்ட இந்த யானையும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி மகிழ்ந்தது. இந்த யானைக்கு 56 வயதான நிலையில், மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் கடந்த சில ஆண்டுகளாகவே அவதியுற்று வந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், யானை சரிவர பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் கடந்த சில மாதங்களாக முன்வைக்கப்பட்டு வந்தது. காந்திமதி குறித்த கருத்துகள் பக்தர்களை கவலை கொள்ள வைத்திருந்தது.
இந்நிலையில், திருக்கோயில் நிர்வாகம் அதற்கு விளக்கம் அளித்தது. நெல்லையப்பர் கோயில் யானை நல்ல உடல்நிலையுடன் ஆரோக்கியமாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் தேவையில்லாத வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலுக்கு, சொந்தமான காந்திமதி என்கிற பெண் யானை கடந்த 1985-ம் ஆண்டு முதல் இத்திருக்கோயிலில் வைத்து நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வின் காரணமாக யானையின் பின் கால்கள் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்ததால், திருநெல்வேலி கால்நடை பன்முக மருத்துவமனை மருத்துவர்கள், மாவட்ட வன அலுவலக மருத்துவர்கள் தொடர் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, திருக்கோயில் யானை நல்ல நிலையில் உள்ளது. மருத்துவரின் ஆலோசனையின்படி தொடர் சிகிச்சை அளித்து வரப்படுகிறது என்று, கோயில் நிர்வாகம் கடந்த மாதம் 3-ம் தேதி தெரிவித்திருந்தது.ஆனால், அதிலிருந்து 40 நாட்களுக்குப்பின் யானை திடீரென்று உயிரிழந்தது பக்தர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. யானை சரிவர பராமரிக்கப்படவில்லை என்பதுதான் பக்தர்கள் மற்றும் சூழல் ஆர்வலர்களின் இப்போதைய குற்றச்சாட்டு. கோயில் யானைகளை வயது முதிர்வடையும் வரையில் கோயிலில் வைத்து பராமரிப்பதற்கு பதிலாக, 40 வயதை கடந்த யானைகளை வனத்துறையிடம் ஒப்படைக்கலாம் என்று பல்வேறு தரப்பினரும் தற்போது கோரிக்கை விடுக்கிறார்கள்.
இது தொடர்பாக, மத்திய அரசின் சுற்றுச்சூழல், வன மற்றும் பருவகால அமைச்சக ஆராய்ச்சி முன்னாள் அதிகாரி முனைவர் எஸ்.சேதுராமலிங்கம் கூறியதாவது: வளர்ப்பு யானைகளை சரிவர பராமரித்தால் அவை 84 வயது வரையிலும் உயிரோடு இருக்கும். ஆனால், காடுகளில் வாழும் யானைகள் தண்ணீர் பற்றாக்குறை, சுகாதாரமற்ற தண்ணீரை அருந்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 45 முதல் 50 வயதுக்குள்ளாக இறந்துவிடுகின்றன. ஒரு யானையை இழந்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் காட்டை நாம் இழக்கிறோம்.
யானை அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. காட்டிலுள்ள மரம், செடி, கொடிகள், இறக்கும் உயிரினங்கள் யாவும் மண்ணோடு மண்ணாக மட்க செய்யும் நுண்ணுயிரிகளுக்கு சிறந்த வாழிடமாக யானைகளின் சாணம் இருக்கிறது. எனவே, நமது சுற்றுச்சூழலில் யானையின் பங்கு மிகவும் பெரியது. இதை பலரும் உணரவில்லை. காட்டு யானைகளை அவற்றின் இயல்பு நிலைக்கு மாறாக வழிபாட்டு தலங்களில் அடைத்து வைத்திருக்கிறோம். இதை சூழல் ஆர்வலர்கள் எதிர்த்து வருகிறோம். நெல்லையப்பர் கோயில் யானையை சரியாக பராமரிக்கவில்லை என்று பலரும் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
தற்போது வழிபாட்டு தலங்களில் எஞ்சியுள்ள யானைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 40 வயது கடந்த யானைகளை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இதனால், இந்த யானைகளை முகாம்களில் வைத்து பராமரிக்க முடியும். யானை பாகன்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக தொடர்ச்சியான பயிற்சிகளை அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.