Published : 28 Jul 2018 11:21 am

Updated : 28 Jul 2018 11:21 am

 

Published : 28 Jul 2018 11:21 AM
Last Updated : 28 Jul 2018 11:21 AM

நாய்கள் ஜாக்கிரதை!

அன்று ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு சிறுவனோடு ஒரு தம்பதியினர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்தனர். சிறுவனை என்னருகில் விட்டுவிட்டு அவர்கள் மருத்துவ ஆலோசனைக்கு உள்ளே சென்றனர். நான் அந்தச் சிறுவனிடம் பேச்சுக் கொடுத்ததில் அவன் தன் அம்மாவை ஒரு நாய் கடித்துவிட்டதாகக் கூறினான்.

அதைக் கேட்டதும் எனக்குச் சிறிது ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், அது அந்த வாரத்திலேயே நான் கேட்கும் இரண்டாவது நாய்க்கடி செய்தியாகும். இரண்டு நாட்களுக்கு முன்புதான் எங்கள் வீட்டுக்குப் பூ விற்க வரும் பாட்டி, தன் மகளை அவர்கள் தெருவில் இருக்கும் ஒரு நாய் கடித்து விட்டதாகக் கூறினார். நாய்களின் எண்ணிக்கை நகரில் அதிகம் ஆகிவிட்டதா அல்லது நாய்கள் மக்களைக் கடிப்பது அதிகமாகிவிட்டதா என்று நான் யோசிக்கத் தொடங்கினேன்.

வீட்டு நாய்களா… வேட்டை நாய்களா?

ஜனவரி மாதத்தில் ஒரு நாளேட்டில், சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் ஒரு வெளிமான் குட்டி தன் வயிற்றுப் பகுதியில் பெருத்த காயத்துடனும் மற்ற இடங்களில் கடிப்பட்ட காயத்துடனும் உயிருக்குப் போராடியபடி இருந்ததைப் பார்த்து வனத்துறைக்குத் தகவல் தெரிவித்ததாகவும், வனத்துறையினர் அந்தச் சிறு மான், நாய்களால் கடிபட்டு ரத்தப் போக்கு ஏற்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்ததாக அறிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சமீப காலத்தில் வெளிமான்கள் மற்றும் புள்ளிமான்கள் நாய்களால் கடிபட்டு இறந்தாலும் ஐ.ஐ.டி. ஒரு காப்புக்காடு அந்தஸ்துகூட இல்லாமல் இருப்பதால் அவர்களால் நாய்களை அப்புறப்படுத்த முடியவில்லை என்று ஐ.ஐ.டி. நிர்வாகம் கூறியதாகவும் அந்தச் செய்திக் குறிப்பு தெரிவித்தது. அதேநேரம் இங்கு உற்பத்தியாகும் உணவுக் கழிவுகள் அறிவியல் முறையில் அகற்றப்படாததால் இவற்றை உண்டு இங்கு நாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

நாய்கள் ஏன் வேட்டையாடுகின்றன?

வளர்ப்பு நாய்களின் வாழ்க்கை முறை அவை வாழும் நாடுகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது. நன்கு வளர்ச்சி அடைந்த நாடுகளில் அவற்றின் வாழ்க்கை முறையும் உணவுப் பழக்க வழக்கங்களும் வளர்ச்சி அடையாத நாடுகளிலிருந்து நிறைய வேறுபடுகிறது. நம் நாட்டிலேயே செல்வந்தர்களின் வீடுகளில் வளர்ப்புப் பிராணியாக உள்ள நாய்களின் வாழ்க்கை, ஏழைகளின் வீட்டுப் பிராணியாக உள்ள நாயின் வாழ்க்கையைவிட வேறுபட்டிருக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால், ஏழையோ பணம் படைத்தவரோ, மனிதர்களின் பாதுகாப்பில் வளரும் நாய்கள் உணவுத் தேவைக்காக எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அவை எப்போது மனிதர்களால் நிராகரிக்கப்படுகின்றனவோ அப்போது அவற்றின் வாழ்க்கை முறையும் மாறுபடுகிறது.

இப்படி நிராகரிக்கப்படும் வளர்ப்பு நாய்களில் சில, தெருக்களில் சுற்றித் திரிகின்றன. குப்பைகளிலிருந்து தேவையான உணவுகளை உண்டு வாழுகின்றன. சில நாய்கள், தெருக்களிலேயே வாழ்ந்தாலும் சிலர் அவற்றுக்கு மிச்சம் மீதி உள்ள உணவை அளிப்பதால் அவையும் உணவுப் பிரச்சினை இன்றி வாழ்கின்றன. சில நாய்கள் இப்படி உணவு ஏதும் கிடைக்காத வேளையில் சிறிது சிறிதாக வேட்டையில் ஈடுபடுகின்றன. முதலில் சிறுபிராணிகளை வேட்டையாடும் இவை சிலகாலத்திலேயே பெருவிலங்குகளை வேட்டையாடவும் பழகிக் கொள்கின்றன. ஆய்வுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.

வேட்டையாடப்படும் வனவுயிர்கள்

அசோகா சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான அறக்கட்டளை (ATREE) செய்த ஆய்வின்படி யாருக்கும் சொந்தம் இல்லாத, தெருக்களில் வாழும் நாய்கள், கிராமங்களில் சிறு விலங்குகளைக் கொன்று பழகி, பின் வளர்ப்புப் பிராணிகளை வேட்டையாட ஆரம்பிக்கின்றன. பிறகு இவை சிறு வனவிலங்குகளான காட்டுமுயல், வயல் எலி, மான் போன்றவற்றை வேட்டையாடி உண்ணப் பழகிக் கொள்கின்றன. ஆஸ்திரேலியாவில் மனிதர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பூனைகள் எவ்வாறு அந்த நாட்டின் பறக்க முடியாத பறவைகளையும் சிறு விலங்குகளையும் கொன்று அவற்றை அழிவின் விளிம்பிக்குக் கொண்டுசென்றனவோ அவ்வாறே இப்போது நாய்களும் நம் நாட்டில் வனவிலங்குகளை வேட்டையாடி அழிப்பதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர்.

ATREE மற்றும் ‘நேச்சர் கன்சர்வேஷன் ஃபவுண்டேஷனி’ன் ஆராய்ச்சியாளர்கள் குழு, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள உப்பர் ஸ்பிடி (Upper Spiti) என்ற இடத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் மட்டும் 570-க்கும் அதிகமான நாய்கள் இருப்பதாகவும் அவை, ஒரு வருடத்தில் 238 கால்நடைகளைக் கொன்றுள்ளதாகவும் கண்டறிந்துள்ளது. இந்த எண்ணிக்கை பனிச்சிறுத்தை (snow leopard) கொல்வதைவிட அதிகம் என்றும் தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

உலகில் பல நாடுகளில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளும் இதையே உறுதிப்படுத்துகின்றன. இது உண்மை என்பதற்கான சான்றாக நான் நேரில் கண்ட இரு நிகழ்வுகளை இங்கே குறிப்பிடுகிறேன்.

ஒரு முறை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் இருந்த நீரோடை அருகில் நானும் நண்பர்களும் சென்றபோது, அங்கிருந்து நான்கு நாய்கள் ஓடின. நாங்கள் அருகில் சென்று பார்த்தபோது, ஒரு புள்ளிமான் பாதி உண்ணப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டோம். அந்தப் புள்ளிமானை நாய்கள்தாம் கொன்றனவா என்று தெரியவில்லை. ஆனால், மறுநாளே அதற்கான விடை கிடைத்தது. அன்று அந்த நீரோடையின் மற்றொரு பகுதியில் ஒரு மான் கூட்டத்தை நாய்கள் துரத்திக் கொண்டு ஓடுவதைக் கண்டேன்.

அடுத்த நிகழ்வு, சென்னையின் பள்ளிக்கரணைப் பகுதியில் நடந்தது. நான்கைந்து நாய்கள் நீரில் இறங்கி நடக்க ஆரம்பித்தன. அவை தங்கள் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தபடி கவனமாக அடியெடுத்துச் சென்றதைப் பார்த்தபோது, அவை ஏதோ ஒரு நோக்கத்தோடு செல்வதுபோல் தோன்றியது. நாணல் புற்கள் பகுதிக்குச் சென்றவுடன் இரண்டு நாய்கள் புதர்களுக்குள் பாய்ந்து சென்றன. அதேநேரம் இரண்டு நாய்கள் நீர்ப்பகுதியில் நின்று கவனித்துக்கொண்டிருந்தன. நாணல் புதர்களுக்குள் அந்த நாய்கள் சென்றவுடன் அங்கிருந்து ஒரு நீலத் தாழைக்கோழி வெளியேறியது. அது வெளிவரும் என்று முன்கூட்டியே அறிந்ததுபோல் அங்கு காத்திருந்த இரண்டு நாய்களும் அந்தப் பறவையின் மீது பாய்ந்து அதைக் கவ்விப் பிடித்துவிட்டன.

இவையெல்லாம் ஒரு சில நிமிடங்களில் நடந்துவிட்டன. ஆனால் அது ஒரு திட்டமிட்ட தாக்குதலாக இருந்தது. ஆப்பிரிக்கக் காடுகளில் சிங்கங்கள் எவ்வாறு ஒன்றாக வேட்டையில் ஈடுபடுமோ அதே போல் இந்த நாய்கள் ஒருங்கிணைந்து வெற்றிகரமான ஒரு வேட்டையை நடத்தின.

பரவும் நோய்கள்

நாய்களால் பரவும் ரேபிஸைப் பற்றி மக்கள் அறிந்திருந்தாலும் ‘டிஸ்டம்பர்’ போன்ற நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைவு. வீட்டு நாய்கள் தவறாமல் மருத்துவப் பராமரிப்பில் இருப்பதால் அவை அதிக அளவில் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், மற்ற நாய்களுக்கு நோய்த் தடுப்பூசி ஏதும் இல்லாததால் அவை டிஸ்டம்பர் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இறப்பதோடு, காட்டு விலங்குகளுக்கும் அவை பரவுவதற்குக் காரணமாக அமைகின்றன.

தீர்வுகள்

மாநகராட்சியும் விலங்குகள் நல வாரியங்களும் தவறாமல் நாய்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தியும் இனப்பெருக்கக் கட்டுப்பாடு (அறுவை சிகிச்சை மற்றும் ரசாயனக் கருத்தடை) செய்தும் அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைப்பது உகந்தது.

தெருக்களில் வசிக்கும் நாய்களைத் தனியார் மற்றும் அரசாங்க நாய்கள் பராமரிப்பு இடங்களுக்கு எடுத்து சென்று பராமரிப்பது நல்லது. இந்த நாய்களின் நலனுக்காகவும் இவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். இவற்றுக்கு உணவு அதிகம் கிடைக்காததாலும், இருக்கும் உணவுக்காகப் பல நாய்கள் போட்டியிடுவதால் உணவுப் பற்றாக்குறையும் அதனால் பலவீனம் அடைந்தும், நோய் எதிர்ப்பு இல்லாமலும் இருக்கின்றன.

வனவிலங்குகளா, வீட்டுப்பிராணிகளா?

நாய்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதை நாம் சாதாரண நிகழ்வாக ஏற்கக் கூடாது. மேலும், சிலர் வனவிலங்குகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவதைவிட வளர்ப்புப் பிராணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதையும் பார்க்க முடிகிறது. மக்களுக்கு உண்மையிலேயே வளர்ப்புப் பிராணிகள் மீது பற்று இருந்தால் வீட்டுப் பிராணிகளாக இருந்த நாய்களை தெரு நாய்களாக மாறவிட்டிருக்க மாட்டார்கள். மேலும், வளர்ப்புப் பிராணிகளையும் வனவிலங்குகளையும் ஒன்றாகக் கருதுவதும் தவறு. இயற்கையின் சமநிலையைப் பராமரிக்க வனவிலங்குகள் உதவுகின்றன. அதேநேரம் வளர்ப்புப் பிராணிகளையும் நாம் உதாசீனப்படுத்துதல் கூடாது.

தெருநாய்கள் ஏழை எளிய மக்களின் வளர்ப்புப் பிராணிகளாகவும், அவர்களுக்குத் தோழர்களாகவும், பாதுகாப்பாளராகவும் இருப்பதை நாம் பார்க்க முடியும். நாமும் அவற்றை அன்போடு அரவணைக்கலாம். அவற்றை ரேபிஸ் போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பது அவற்றுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் நன்மையாகும் .

முக்கியமாக, இனப்பெருக்கக் கட்டுப்பாடு சிகிச்சைக்காகவும், தடுப்பூசி செலுத்துவதற்காகவும் பிடிக்கும்போது அவற்றைத் துன்புறுத்தாமல் பிடிப்பது மிக அவசியம். மக்களும் மிச்சம் மீதியாகும் உணவைப் பொறுப்பான முறையில் அப்புறப்படுத்துதல் கட்டாயமாகும்.

நாம் நாய்கள் போன்ற வீட்டுப் பிராணிகளை வளர்ப்பது நாம் நம் இயற்கையோடு நமக்குள்ள பந்தத்தை உறுதிப்படுத்துவது போன்ற ஒரு மாயை என்றே சொல்ல வேண்டும். பொதுவாக, குழந்தைகள் கேட்கிறார்கள், குட்டியாக இருக்கும்போது அழகாக இருக்கிறது, வீட்டுக்குக் காவல், தனக்கு ஒரு துணை தேவை என்பது போன்ற காரணங்களுக்காக வளர்க்கப்படும் நாய்கள் பராமரிப்புச் செலவு, கவனிப்பதற்கு ஆள் இல்லை, வீட்டில் இடம் இல்லை, வீடு மாறுதல், வேலைப் பளு போன்ற காரணங்களால் உதாசீனப்படுத்தப்பட்டும், நிராகரிக்கப்பட்டும் தெருக்களில் வாழும் அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

பல ஆண்டுகளாக நமக்குக் காவலாகவும், விசுவாசமான நண்பர்களாகவும் இருந்த, இருக்கும் நாய்கள், மற்ற விலங்குகளை வேட்டையாடும் விலங்குகளாகவும், நோய் பரப்பும் காரணிகளாகவும், மாறுவது நம்மால்தான். நாம் நம்மைச் சுற்றியுள்ள, நம்மைச் சார்ந்துள்ள விலங்குகளை அன்போடு பராமரித்து வந்தால் அவையும் தங்கள் இயல்பு மாறாமல் இருக்கும் என்று நம்பலாம்.

கட்டுரையாளர், காட்டுயிர் செயல்பாட்டாளர்

தொடர்புக்கு: mcwhale.t@gmail.com

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

பூநாரை தேசம்

இணைப்பிதழ்கள்