கோவை குட்டி யானையை முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்க ஆலோசனை

கோவையில் குட்டி யானையை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியாக ட்ரோன் மூலம் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 
கோவையில் குட்டி யானையை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியாக ட்ரோன் மூலம் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 
Updated on
1 min read

கோவை: கோவையில் பெண் யானை உயிரிழந்த நிலையில் குட்டியை யானை கூட்டம் சேர்த்து கொள்ளவில்லையெனில் முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்க வனத்துறை ஆலோசித்து வருகின்றனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தொண்டாமுத்தூர், தடாகம் மற்றும் மருதமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. உணவு, தண்ணீர் தேடி இரவு நேரங்களில் விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த டிச.24-ம் தேதி பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பகுதியில் 30 வயதுமிக்க பெண் யானை உயிரிழந்தது. இதனிடையே 2 மாதமே ஆன குட்டியை மீட்ட வனத்துறையினர் கடந்த 4 நாட்களாக யானை கூட்டத்துடன் சேர்க்க முயற்சி செய்து வருகின்றனர்.

கோவை மண்டல வனப்பாதுகாவலர் வெங்கடேஷ், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையில் உதவி வன பாதுகாவலர் விஜயகுமார் மற்றும் வனக் கால்நடை மருத்துவர் சுகுமார், கோவை வனச்சரகர் திருமுருகன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். வனப்பணியாளர்கள் சுமார் 3 குழுக்களாகப் பிரிந்து ட்ரோன் உதவியுடன் யானை கூட்டத்தின் நடமாட்டம் அறிந்து, அதைத் தொடர்ந்து சென்று குட்டியை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இரண்டு யானை கூட்டமும் குட்டியை சேர்த்துக் கொள்ளாமல் சென்றது.

இதுகுறித்து, கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறும்போது, “பெண் யானை உயிரிழந்த நிலையில் தனியே உள்ள குட்டியை யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இன்றும் (டிச.28) தொடர்ந்து குட்டியை யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி நடைபெறும். ஒருவேளை குட்டி யானையை கூட்டம் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை பெற்று முகாமுக்கு கொண்டு சென்று பராமரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்,” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in