

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள ருத்ராட்சை மரத்தில் காய்கள் காய்க்க தொடங்கியுள்ளன..
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா இயற்கையாகவே உருவானது. இங்கு பழமைவாய்ந்த அரிய வகை மூலிகைகள், மரங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி தாவரவியல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கமாக இந்த பூங்கா விளங்குகிறது.
இந்நிலையில், நேபாளத்தை தாயகமாக கொண்ட ருத்ராட்சை மரங்கள் கடந்த 1948-ம் ஆண்டு இப்பூங்காவில் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மரத்தை பக்தி பரவசத்துடன் பார்த்துச் செல்கின்றனர். ருத்ராட்சையை இந்து சமுதாயத்தின் புனிதமாக கருதி அவற்றை பயன்படுத்துகின்றனர்.
‘எலியோகார்பஸ் கனிட்ரஸ்’ என்ற தாவரவியல் பெயரை கொண்ட இந்த மரத்தின் விதை தான் ருத்ராட்சை. இமய மலையின் அடிவாரத்தில் உள்ள கங்கை சமவெளிப் பகுதிகளில் இருந்து தென் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, ஹவாய் தீவுகள் வரை இம்மரங்கள் வளர்கின்றன.
இந்த மரத்தின் பழம் பச்சை நிறமாக இருந்து கனியும் போது நீல நிறமாக மாறும். இந்த மரம் நான்கு ஆண்டுகளில் காய்க்க தொடங்கும். நம் இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் நோய் நிவாரணியாக ருத்ராட்சை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ருத்ராட்சையில் ஒன்று முதல் 21 முகங்கள் வரை உள்ளன. இதில் 5 முகங்கள் கொண்ட ருத்ராட்சை கொட்டைகளை இந்துக்கள் தங்கள் கழுத்தில் அணிகின்றனர்.
தற்போது ருத்ராட்சை சீசன் தொடங்கியுள்ளதால் மலை மாவட்டமான நீலகிரியில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான சிம்ஸ் பூங்காவில் உள்ள 3 மரங்களில் ருத்ராட்சை காய்கள் கொத்து கொத்தாக காய்த்து தொங்குகின்றன. வழக்கத்துக்கு மாறாக தற்போது இந்த காய்கள் பெரிதாகவும், அதிகளவிலும் காய்ந்துள்ளதால் பூங்கா ஊழியர்கள் வியப்படைந்துள்ளனர்.
இதுகுறித்து பூங்கா ஊழியர்கள் கூறும்போது, ஆண்டுதோறும் நவம்பர் மாதம் ருத்ராட்சை காய்கள் காய்க்கும். பூங்காவில் உள்ள 3 மரங்களில் ருத்ராட்சை காய்கள் காய்கள் காய்க்க தொடங்கியுள்ளன. ருத்ராட்சை காய்கள் அதன் முகங்களை கொண்டு விலை நிர்ணயிக்கப்படும். ஒரு காய் ரூ.10 முதல் ரூ.30 வரையிலும், அரிய காய்கள் ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்கப்படுகின்றன’ என்றனர்.
மரத்தில் இருந்து விழும் காய்களை உள்ளூர்வாசிகள் சேகரித்து மாலையாக கோர்த்து சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். ருத்ராட்ச சீசன் தற்போதே தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் சிம்ஸ் பூங்காவை ஆர்வமுடன் பார்வையிட்டு புகைப்படங்கள் எடுத்துச் செல்கின்றனர்.