

கோவை: கோவையில் பெண் யானை உயிரிழந்த நிலையில் குட்டியை யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் மூன்றாவது நாளாக ஈடுபட்டனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தொண்டாமுத்தூர், தடாகம் மற்றும் மருதமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. உணவு, தண்ணீர் தேடி இரவு நேரங்களில் விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த டிச.24-ம் தேதி தடாகம் மற்றும் வரப்பாளையம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்தது. வனத்துறையினர் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
இதனிடையே, குட்டி யானை ஒன்று வனப்பகுதியில் தனியாக சுற்றி கொண்டிருந்தது. இதையடுத்து குட்டியை மீட்டு யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டிருந்த நிலையில், அதன் தாய் 30 வயது மிக்க பெண் யானை அமர்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதுபற்றி தகவலறிந்த கோவை மண்டல வனப்பாதுகாவலர் வெங்கடேஷ், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையில் உதவி வன பாதுகாவலர் விஜயகுமார் மற்றும் வனக் கால்நடை மருத்துவர் சுகுமார், கோவை வனச்சரகர் திருமுருகன் ஆகியோர் யானை உயிரிழந்தது குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, பொன்னூத்து அம்மன் கோயில் வனப்பகுதியில் தனியாகப் பிரிந்து வந்த குட்டியை யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இரண்டு முறை யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், பெண் யானைகள் கூட்டத்துடன் சேர்த்து கொள்ளவில்லை.
இதையடுத்து, டிச.25-ம் தேதி மூன்று குழுக்களாகப் பிரிந்து வனப்ணியாளர்கள் குட்டியை யானை கூட்டத்துடன் சேர்க்க முயன்றனர். அப்போது பொன்னூத்து அம்மன் கோயில் படிக்கட்டு பகுதியில் யானை கூட்டம் கண்டறியப்பட்டு, பின்னர் குட்டி யானையை சேர்த்தபோது, குட்டி யானையை பார்த்தவுடன் யானை கூட்டம் தனது வழியை மாற்றி சென்றது.
இதைத்தொடர்ந்து ட்ரோன் கேமரா உதவியுடன் யானை கூட்டம் செல்லும் வழியை கண்டறிந்து, சின்னமலை பகுதியில் செல்வதை கண்டறிந்து, குட்டி யானையை சின்னமலை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு யானை கூட்டத்துடன் குட்டியைச் சேர்த்தனர். ஆனால், யானை கூட்டம் குட்டியை சேர்த்துக் கொள்ளாமல் தனியாகச் சென்றது. எனவே குட்டி யானையை மீட்டு வரப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
இதனிடையே, மூன்றாவது நாளாக இன்று வனத் துறையினர் யானை கூட்டத்தை தேடும் பணியில் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு யானை கூட்டத்தை தேடி குட்டியை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறும்போது, “யானை கூட்டத்தில் இருந்து தனியாகப் பிரிந்து வந்த குட்டியை ட்ரோன் கேமரா மூலம் உதவியுடன் மீண்டும் யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் 3 யானை கூட்டங்கள் உள்ளன. அதில் உள்ள யானை கூட்டங்களில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். வன கால்நடை அலுவலரின் அறிவுரையின்படி உரிய கால இடைவெளியில் சீரான உணவு அளிக்கப்பட்டு குட்டி ஆரோக்கியமாக உள்ளது” என்றார்.