

மாமல்லபுரத்தை அடுத்த வடநெம்மேலி பாம்பு பண்ணைக்கு கண்ணாடி விரியன், நல்லபாம்பு பிடிக்க 10 மாதங்களுக்கு பிறகு மத்திய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, மேற்கண்ட 2 வகைகளை சேர்ந்த பாம்புகளை பிடிக்கும் பணியில் உரிமம் பெற்ற பழங்குடி இருளர் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த வடநெம்மேலி கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி தமிழக அரசின் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இதன் ஒருபகுதியில் பாம்பு பண்ணை அமைந்துள்ளது. மேற்கண்ட சங்கத்தில் பாம்பு பிடிக்கும் உரிமம் பெற்ற 343 பேர் உட்பட 423 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள், வனத்துறையினர் அனுமதிபெற்று பாம்பு பிடித்து பண்ணைக்கு கொண்டு வந்து வழங்குவர். பாம்பின் வகைக்கு ஏற்ப அவர்களுக்கு கூலி வழங்கப்படும்.
மேலும், இவ்வாறு பிடித்து வரப்படும் பாம்புகளில் இருந்து விஷம் எடுக்கப்பட்டு மருத்துவ தேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. பாம்பு பண்ணையில், விஷம் எடுப்பதை பார்க்க சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்படுவர். இதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. பண்ணைக்கு கொண்டு வரப்படும் கண்ணாடி விரியன், நல்லபாம்பு, கட்டுவிரியன், சுருட்டை விரியன் ஆகிய 4 விஷ பாம்புகள் முறையாக பராமரிக்கப்படுவதோடு, அவற்றின் விஷம் மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. சில தினங்களுக்கு பிறகு அவை அடர்ந்த வனப்பகுதிகளில் விடுவிக்கப்டும்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள மத்திய வனத்துறை இயக்குநரகம் திடீரென கடந்த மார்ச் 1-ம் தேதிமுதல் நல்லபாம்பு, கண்ணாடி விரியன் ஆகியவற்றை பிடிக்க இந்த பாம்பு பண்ணைக்கு தடை விதித்தது. அதனால், கடந்த 10 மாதங்களாக மேற்கண்ட 2 வகை விஷ பாம்புகள் இல்லாமல் மற்ற வகை பாம்புகளை மட்டுமே பிடித்து வந்தனர். தடை செய்யப்பட்ட 2 விஷ பாம்புகளை வைத்துதான் வடநெம்மேலி பாம்பு பண்ணை செயல்பட்டு வந்தது. அதனால், வடநெம்மேலி பாம்பு பண்ணையில் கட்டுவிரியன், சுருட்டை விரியன் ஆகிய 2 வகையை சேர்ந்த 3,500 பாம்புகள் மட்டுமே மண் பானைகளில் பராமரிக்கப்பட்டு விஷம் எடுக்கப்பட்டு வந்தன.
டிசம்பர் முதல் ஏப்ரல் வரையில் மட்டும் பாம்பு பண்ணைக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம். மேலும், நல்ல பாம்புகள் படமெடுத்து ஆடுவதை ஆர்வத்துடன் கண்டு ரசிப்பர். தற்போது, சுற்றுலா சீசன் தொடங்கியுள்ளதால் வெளிநாட்டு பயணிகள் உட்பட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் நிலை உள்ளது. மேலும், குறிப்பிட்ட 2 வகை பாம்புகளை பிடிக்க தடை உள்ளதால், நல்லபாம்பு பிடிக்கும் பழங்குடி இருளர் மக்களும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால், நல்லபாம்பு மற்றும் கண்ணாடி விரியன் பாம்புகளை பிடிப்பதற்கு, மத்திய வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மத்திய வனத்துறை நிர்வாகம் 10 மாதங்களுக்கு பிறகு தடையை நீக்கி நல்லபாம்பு மற்றும் கண்ணாடி விரியன் பாம்புகளை பிடிக்க அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, பாம்பு பண்ணைக்கு வழங்குவதற்காக உரிமம் பெற்றுள்ள பழங்குடி இருளர் மக்கள் முட்புதர்கள், வயல்வெளிகளுக்கு சென்று நல்லபாம்பு, கண்ணாடி விரியன் பாம்புகளை பிடிக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். இதனால், பாம்பு பண்ணையில் விரைவில் புதிய பாம்புகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம். மேலும், இருளர் மக்களுக்கு வருவாய் கிடைப்பதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால், பழங்குடியின இருளர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.