நீலகிரி சர்ச்சை: சினையாக இருந்தது தெரியாமல் மயக்க ஊசி செலுத்தியதால் வரையாடு இறந்ததா?

நீலகிரி சர்ச்சை: சினையாக இருந்தது தெரியாமல் மயக்க ஊசி செலுத்தியதால் வரையாடு இறந்ததா?
Updated on
1 min read

உதகை: வரையாடு சினையாக இருந்தது தெரியாமல், மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் இறந்ததா? என வனவிலங்கு ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடு, அழிந்து வரும் உயிரினமாக இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் நாட்டிலேயே முதல்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை ரூ.25.14 கோடி மதிப்பில் செயல்படுத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதன்படி ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, டெலிமெட்ரிக் ரேடியோ காலரிங் பொருத்தி தொடர்ந்து பாதுகாத்தல், நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தல் மற்றும் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 7-ம் தேதியை ‘வரையாடு தினம்’ என அனுசரித்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரையாடுகளுக்கு புதிதாக ரேடியோ காலர் கருவி பொருத்தி, அவற்றின் வாழ்வியல் சூழல்கள் குறித்த விவரங்களை சேகரிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.

அதன்படி ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் முக்கூர்த்தி தேசியப் பூங்கா வனப்பகுதிகளில் 12 வரையாடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டது. நீலகிரியில் இதுவரை 3 ஆடுகளுக்கு, ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது. முக்கூர்த்தி தேசியப் பூங்கா வனப்பகுதியில் 4-வது வரையாடுக்கு ரேடியோ காலர் பொருத்த மயக்க ஊசி செலுத்தியபோது உயிரிழந்தது. இதனால் வரையாடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

சினையாக இருந்ததால் இறந்ததா? - உயிரிழந்த வரையாடு வயிற்றில் குட்டி இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து ஓசை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி காளிதாஸ் கூறியதாவது: மான், வரையாடு போன்ற சிறிய வகை விலங்குகளுக்கு துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தாமல், குழாய் மூலம் செலுத்தலாம்.

இந்த வரையாடுக்கு எவ்வாறு மயக்க மருந்து செலுத்தப்பட்டது என்று தெரியவில்லை. வழக்கமாக இருப்பதைவிட சினை காலத்தில் எல்லா விலங்குகளும் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கும். இதனால் வயிற்றில் குட்டியுடன் இருந்ததால், மயக்க மருந்து செலுத்தப்பட்டதுகூட வரையாடு இறந்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம், என்றார்.

இது குறித்து நீலகிரி வரையாடு திட்ட இயக்குநர் கணேசன் கூறும்போது, ‘‘முக்கூர்த்தியில் 3 வரையாடுகளுக்கு வெற்றிகரமாக மயக்க மருந்து செலுத்தப்பட்டு, ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டது. நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட ஒரு வரையாடுக்கு மயக்க மருந்து செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டது. 4-வது வரையாடுக்கு ரேடியோ காலர் பொருத்துவதற்காக மயக்க மருந்து செலுத்தி, ரேடியோ காலர் கருவி பொருத்தும் சமயத்தில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்து விட்டது. வரையாடுகளை பிடிக்க மாற்று வழிமுறைகளை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in