கோவை மத்திய சிறையில் உணவு கழிவில் இருந்து ‘பயோ கேஸ்’ உற்பத்தி

கோவை மத்திய சிறையில் உணவு கழிவில் இருந்து ‘பயோ கேஸ்’ உற்பத்தி
Updated on
1 min read

கோவை: கோவை மத்திய சிறையில் உணவுக் கழிவில் இருந்து ‘பயோ கேஸ்’ உற்பத்தி செய்யும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் முழு அளவில் செயல்பாட்டுக்கு வரும்போது, சிறை உணவுக் கூடத்தில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள், குண்டர் தடுப்புப் பிரிவு கைதிகள், உயர் பாதுகாப்புப் பிரிவு கைதிகள் என மொத்தம் 1,300-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குற்றங்களுக்கு தகுந்தவாறு சிறையின் பல்வேறு பிளாக்குகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறை வளாகத்தில் ஆண்கள் சிறை மட்டுமின்றி பெண்கள் சிறையும் அமைந்துள்ளது. கைதிகளுக்கு உணவு வழங்குவதற்காக சிறை வளாகத்தில் உணவு தயாரிக்கும் கூடம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட கைதிகள் பணியாற்றி வருகின்றனர். சிறையில் விளைவிக்கப்படும் காய்கறிகள், ஒண்டிப்புதூரில் உள்ள திறந்த வெளி சிறைச்சாலையில் விளைவிக்கப்படும் காய்கறிகள் ஆகியவற்றை பயன்படுத்தியும், வெளியிட மார்க்கெட்டுகளில் இருந்து வாங்கி வரப்படும் காய்கறிகளை பயன்படுத்தியும் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

இவ்வாறு தயாரிக்கப்படும் உணவு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளுக்கும், 3 வேளையும் வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கியதில் மீதமாகும் உணவுக்கழிவுகள், சமையல் கூடங்களில் இருந்து மீதமாகும் உணவுக் கழிவுகள் சிறை நிர்வாகத்தினரால் சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் உணவுக் கழிவுகள், சிறை வளாகத்தில் முன்பு குழி தோண்டி கொட்டப்பட்டு அழிக்கப்பட்டது. தற்போது, இதில் ‘பயோ-கேஸ்’ உற்பத்தி செய்யும் திட்டம் சிறைத்துறை நிர்வாகத்தினரால் தொடங்கப்பட்டுள்ளது.

பயோ-கேஸ் என்பது கரிமக் கழிவுகளின் சிதைவிலிருந்து இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் ஒரு வகை உயிரி எரிபொருள் ஆகும். உணவுக் கழிவுகள் உள்ளிட்ட கரிமப் பொருட்கள் காற்றில்லாத சூழலில், அழுத்தம் கொடுக்கும்போது, அவை வாயுக்களின் கலவையை வெளியிடுகிறது. இவ்வாறு பெறப்படும் பயோ-கேஸ் வாயுவை வைத்து உணவுப்பொருட்கள் தயாரிப்பதற்கான நடவடிக்கையை சிறைத்துறை நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் கூறும்போது, ‘‘சிறையில் குறிப்பிட்ட கிலோ கணக்கில் உணவுக் கழிவுகள் சேகரமாகின்றன. இவற்றை பயன்படுத்தி பயோ-கேஸ் உற்பத்தி செய்து, அதை சமையலுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, வாயு உற்பத்திக்கான பிரத்யேக கலன்கள் உள்ளிட்டவை மூலம்உணவுக்கழிவில் இருந்து பயோ-கேஸ் உற்பத்தி செய்யப்பட்டது. சோதனை அடிப்படையில் சிறை கைதிகளுக்கு வழங்கும் தேநீர் தயாரிக்கும் பணிக்கு அது பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து பயோ-கேஸ் உற்பத்திக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றார்.

சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறும்போது, ‘‘சிறையில் பயோ-கேஸ் எரிவாயுத் திட்டம் தற்போது தான் தொடங்கப்பட்டுள்ளது. அதன் உற்பத்திஅளவு சில நாட்கள் கழித்துத் தான் தெரியும். சிறையில் தற்போது கொதிகலன் அடுப்பு, சிலிண்டர் எரிவாயு அடுப்பு ஆகியவை மூலம் உணவு தயாரிக்கப்படுகிறது. பயோ-கேஸ் எரிவாயுத் திட்டமும் முழு நடைமுறைக்கு வந்தால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in