சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 130 நகரங்களில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

இடம்: திருச்சி
இடம்: திருச்சி
Updated on
1 min read

புதுடெல்லி: தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, திருச்சி உள்பட நாடு முழுவதும் 130 நகரங்களில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் இன்று (நவ. 28) அளித்த பதிலில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகத்தின் இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், "தேசிய, மாநில மற்றும் நகர அளவிலான தூய்மையான காற்று செயல் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் 130 நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் 2019 ஜனவரியில் தேசிய தூய்மை காற்று திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டம் மூலம் 2025-26-க்குள் பிஎம் 10 அளவை 40% வரை குறையும் அல்லது தேசிய தரத்தை (60 மைக்ரோகிராம் கன மீட்டர்) அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 2019-20-ம் ஆண்டு முதல் 2025-26-ம் ஆண்டு வரை ரூ.16,539 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 15-வது நிதிக்குழுவின் மில்லியன் பிளஸ் நகர சவால் நிதியின் கீழ் 48 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் மற்றும் நகர்ப்புற கூட்டுப்பகுதிகளுக்கு நகர செயல் திட்டங்களின் கீழ் காற்றின் தர மேம்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக செயல்பாட்டுடன் இணைந்த ஊக்கத்தொகையாக இதுவரை ரூ.9,595.66 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

2023-24 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டின்படி, 130 நகரங்களில் 97 நகரங்களில் 2017-18 உடன் ஒப்பிடும்போது 2023-24 நிதியாண்டில் பிஎம்10 செறிவுகளின் அடிப்படையில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2017-18-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023-24 ஆம் ஆண்டில் 55 நகரங்கள் பிஎம் 10 அளவுகளில் 20% மற்றும் அதற்கு மேல் குறைப்பை எட்டியுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in