

ஒரே ஒரு முறை மட்டுமே பூக்கக்கூடிய அரிய தாவர வகைகளில் ஒன்றான தாழிப்பனை, தமிழகம் பெருமைப்பட்டுக்கொள்ளவதற்கு உரிய மரம். தமிழகத்தின் சில பகுதிகளில் இந்த மரம் பூப்பது குறித்த செய்திகள் வந்ததைப் பார்த்திருக்கலாம். தற்போது மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள தாழிப்பனை அழியும் ஆபத்தில் உள்ளது.
புல் வகையைச் சேர்ந்த பனை மரங்கள் சுமார் 8 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரெடேஷியஸ் (Cretaceous) காலத்தில் தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சுமார் 21 வகைகளாகக் காணப்படும் பனைக் குடும்பத்தில் தாழிப்பனை, தமிழகத்துக்கே உரிய இயல் தாவரம்.
தாழிப்பனையின் (Corypha umbraculifera) ஒலைகள் நீளமாகவும், அகலமாகவும் இருப்பதால் இவற்றைப் பக்குவப்படுத்தி இரும்பு எழுத்தாணி (Stylus) கொண்டு ஓலைச்சுவடிகளில் எழுதுவதற்குத் தொல் தமிழர்கள் பயன்படுத்தினர். கிழக்கிந்தியா, தென்னிந்தியா, இலங்கை மட்டுமின்றி கம்போடியா, மியான்மர், சீனா, தாய்லாந்து, அந்தமான் தீவுகளிலும் தாழிப்பனைகள் காணப்படுகின்றன.
சுமார் 82 அடிவரை வளரும். இதன் தண்டு 4.3 அடி அகலம்வரையும், ஓலைகள் 16 அடி நீளம்வரையும், சுமார் 130 இதழ்கள்வரை விரியும் தன்மை கொண்டது. இதன் மஞ்சரி (Inflorescence) பளிச்சிடும் நிறத்துடன் காணப்படும். பல லட்சம் சிறு பூக்கள் மரத்தின் உச்சியில் பூக்கின்றன. எண்பது முதல் நூறு ஆண்டுகள்வரை வாழும் தாழிப்பனையில் சுமார் 3-4 செ.மீ., அளவுள்ள மஞ்சள், பச்சை கலந்த ஆயிரக்கணக்கான பழங்கள் காய்க்கும். ஒரே முறை (Monocarpic) பூத்த பின், மரம் பட்டுப் போய்விடும்.
இதன் ஓலைகள் கூரை வேய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. தாழிப்பனையின் சாறு கள்ளாகப் பருகப்பட்டுள்ளது. இதன் இலைகள் குடையாகவும் பயன்படுத்தப்படுவதால், மலையாளத்தில் ‘குடப்பனை’ அல்லது ‘குடைப்பனை’ என அழைக்கப்படுகிறது. இலங்கையில் ‘தலா’ (tala) எனவும், பிலிப்பைன்சில் ‘ஃபர்ரி’ (furry) என்றும், ஆங்கிலத்தில் ‘டலிபாட் பாம்’ (talipot palm) என்றும் அழைக்கப்படுகிறது.
தமிழகத்தின் சில பகுதிகளில், ‘விசிறிப் பனை’, ‘கோடைப் பனை’ என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் பரவலாகக் காணப்பட்ட தாழிப்பனை, தற்போது அழிவின் விளிம்பில் உள்ள தாவர வகைகளில் ஒன்றாக உள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு செம்பரம்பாக்கத்தை அடுத்த மேப்பூர் தாங்கல் கிராமத்தில் ஒரு மூதாட்டியின் வீட்டுக்கு அருகேயும், 2014-ம் ஆண்டு திருச்சி துவரங்குறிச்சிக்கு அருகில் உள்ள லெக்கநாயக்கம்பட்டி என்ற கிராமத்திலும் தாழிப்பனை கண்டறியப்பட்டது குறித்துப் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. உலகத் தமிழ் கழகத்தைச் சேர்ந்த புதுவை வேலாயுதம், மருத்துவர் மைக்கேல் செயராசுவின் வழிகாட்டுதலில், கடந்த 2016-ம் ஆண்டு மேல்மருவத்தூரில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் குச்சி குளத்தூர் கிராமத்துக்கு அடுத்துள்ள பாதிரி (கல்லாங்குப்பம்) கிராமத்தில் பூத்திருந்த இரு தாழிப்பனைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
பாதுகாக்கத் தவறினால் அழிவுக்கு உள்ளாகும் (threatened species) தாவர வகையாக தாழிப்பனையை வகைப்படுத்தியுள்ளது, சர்வதேச இயற்கைப் பாதுகாப்புக் கழகம். எஞ்சியிருக்கும் மரங்களைக் காப்பாற்றாவிட்டால், அரிய பெருமை கொண்ட இந்த மர வகையைத் தமிழகம் இழக்க நேரிடும்.
கீழ்க்குவளைவேடு தாழிப்பனைப் பூங்கா ஆகுமா?
தென்னிந்தியாவில், குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் தாழிப்பனை தென்படுகிறது. இந்தியாவில் மட்டும் ஐந்து வகையான தாழிப்பனை உள்ளது. தமிழர்களால் மிகவும் புனிதமான மரமாகக் கருதப்படும் இது கோயில், வயல்வெளிகளில் காணப்படுகிறது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பி.ரவிச்சந்திரன், வந்தவாசி அருகே உள்ள கீழ்க்குவளைவேடு கிராமத்தில் இந்த மரத்தைச் சமீபத்தில் அடையாளம் கண்டார். இந்தத் தகவலை சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் ஓய்வுபெற்ற தாவரவியல் துறைப் பேராசிரியர் நரசிம்மனிடம் தெரிவித்தார்.
“அந்தத் தகவல் கிடைத்ததுமே கே.தேவநாதன், க்ரெனி லோக்கோ ஆகிய என் இரண்டு ஆய்வு மாணவர்கள் அந்தக் கிராமத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆரணி மெயின் ரோட்டில், செல்லி அம்மன் கோயில், அதற்கு அருகில் உள்ள ஏரிக்கரை ஆகிய பகுதிகளில் சுமார் 200 தாழிப்பனை மரங்கள் உள்ளது தெரிய வந்தது.
அந்த எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், தமிழகத்திலேயே இங்குதான் அதிக அளவில் தாழிப்பனைகள் இருக்கின்றன என்பது புலனாகிறது. அவற்றில் சுமார் 50 மரங்களில் பூக்கள் பூத்து, காண்பவரின் மனதைக் கொள்ளை கொள்கின்றன. அப்படி ஒரு அரிய காட்சியைப் பார்க்க ஒரு வாழ்நாள் தேவைப்படும்” என்றார் பேராசிரியர் நரசிம்மன்.
மேலும் அவர் கூறியபோது, “அந்தக் கிராமத்தில் உள்ள பெரியவர்களுடன் பேசியபோது, இத்தனை மரங்கள் வளர்வதற்கு, சுமார் நான்கு அல்லது ஐந்து மரங்கள் தாய் மரங்களாக இருந்திருக்கலாம் என்றனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, வவ்வால் போன்ற பறவைகள் மூலமாக தாய் மரங்களில் இருந்து விதைகள் பரவி இருக்கலாம். அருகில் ஏரி இருந்தது மரங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கலாம்.
இந்த ஒரு அம்சம், தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாதது. இந்த மரத்தை வழிபடும் மக்கள், மரத்திலிருந்து இயல்பாக விழும் எந்த ஒரு பொருளையும் தொடுவதுகூட இல்லை. தற்காலத்தில், விவசாய நடவடிக்கைகள் அதிகமாகிவிட்டதால், இந்த மரங்களின் விதைப் பரவல் தடைபட்டிருக்கிறது. இவ்வளவு அதிக எண்ணிக்கையில் தாழிப்பனைகள் இருக்கும் இந்தப் பகுதியை ‘தாழிப்பனை பூங்கா’வாக அறிவித்து, பாதுகாக்க வேண்டும். அதற்கு கிராம நிர்வாகம், வனத்துறை மற்றும் மாநில உயிரினப் பன்மை வாரியம் ஆகியவை ஆவன செய்ய வேண்டும்” என்றார்.
கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com