

சென்னை: காலநிலை மாற்றத்தின் காரணமாக மக்கள், விலங்குகள், சுற்றுச்சூழல், சுகாதாரம் ஆகியவற்றுக்கு நேர்ந்துள்ள சிக்கல்களை தீர்க்க ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம் அமைப்படுகிறது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: காலநிலை மாற்றத்தின் காரணமாக, மக்கள், விலங்குகள், சுற்றுச்சூழல், சுகாதாரம் ஆகியவற்றுடன் பின்னிப்பிணைந்த சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றை எதிர்கொள்வதற்கான ஒரு முன்னோடி முயற்சியை சுகாதாரத் துறை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள், நோய்க்கடத்திகள் மூலமாக பரவும் நோய்கள், நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன், பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஏற்படும் இழப்பு, காலநிலை மாற்றம் போன்றவற்றில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதற்காக பொது சுகாதாரம், கால்நடை மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சிகளை ஒருங்கிணைந்த நல்வாழ்வு மையம் வலியுறுத்துகிறது.
காலநிலை மாற்றத்தால் உருவாகும் உடல்நல பாதிப்புகளுக்குத் தீர்வு காண்பதற்கான கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை இந்த மையம் உருவாக்கும். கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சியை வலுப்பெறச்செய்யும். தலைவர், செயலர் நியமனம், சுகாதாரத் துறை செயலாளர் இந்த மையத்துக்கு தலைமை வகிப்பார்.
தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் திட்ட இயக்குநர் செயலாளராக இருப்பார். தேசிய நல்வாழ்வு இயக்கத்தின் நிர்வாக இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இந்தியாவில் ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை உத்திகளுக்கு இந்த மையம் ஒரு முன்மாதிரியாக அமையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.