டங்ஸ்டன் கனிம சுரங்கத்துக்கு எதிர்ப்பு: கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கூடிய கிராம மக்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கூடிய கிராம மக்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
Updated on
1 min read

மதுரை: மதுரை அரிட்டாபட்டியில் இன்று வேதாந்தா நிறுவனம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து 10 கிராம மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்தனர்.

தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமான அரிட்டாபட்டி பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் வேதாந்தா நிறுவனத்திற்கு டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. இதற்கு அரிட்டாபட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

மேலும் கிராம சபைக்கூட்டங்களில் இயற்கை வளங்கள், மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கான அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் நவ.23-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றும் வகையில் அரிட்டாபட்டியில் கிராம மக்கள் ஒன்று கூடினர். அரிட்டாப்பட்டியில் மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ.வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம், கிடாரிப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 10 கிராம மக்கள் இன்று ஒன்று கூடினர்.

இக்கூட்டத்தில் கிராம மக்கள் கலந்து ஆலோசனை செய்தனர். இக்கூட்டத்தில், நவ.23-ல் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும், கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டது. மேலும், அழகர்கோவிலில் 48 கிராமத்தினர் நவ.26-ம் தேதி செவ்வாய்க்கிழமை ஒன்றுகூடி அடுத்த கட்டப்போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in