

கோவை: வளர்ப்பு யானைகளை மேலாண்மை செய்ய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், கோயில் யானைகளுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக 48 நாட்கள் யானைகள் நல வாழ்வு முகாம் நடத்தப்படுகிறது.
முதன்முதலாக, நீலகிரி மாவட்டம் முதுமலை அருகேயுள்ள தெப்பக்காட்டில், கடந்த 2003-ம் ஆண்டு யானைகள் நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள, தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதியில் யானைகள் நல வாழ்வு முகாம் நடத்தப்பட்டது. கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் யானைகள் முகாம் நடத்தப்பட்டன. யானைகள் நல வாழ்வு முகாமில், தினமும் யானைகளுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதாவது, தினமும் யானைகளின் உடல் நலம் பரிசோதிக்கப்பட்டு, கரும்பு, அன்னாசிப்பழம், ஆப்பிள், சத்து மாத்திரைகள் ஆகியவை அடங்கிய தீவனத் தொகுப்பு உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்பட்டு வந்தன. மேலும், யானைகளின் உடல் நலத்தை மேம்படுத்த மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வந்தன. இதுவரை 13 முறை யானைகள் நல வாழ்வு முகாம் நடத்தப்பட்டது. பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இம்முகாம் நடத்துவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று (நவ.18) திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாகன் உள்ளிட்ட இருவரை தாக்கியது. இதில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். யானைகளின் உடல்நலத்தை மேம்படுத்த வழங்கப்பட்டு வந்த, நலவாழ்வு முகாம் உள்ளிட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதும் யானைகள் இந்த ஆக்ரோஷ மனநிலைக்கு மாறுவதற்கு ஒரு காரணம் என தகவல்கள் பரவின.
விபத்து குறித்து ஆய்வு செய்ய வேண்டும்: இதுகுறித்து, ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் மனோகரன் கூறும்போது, ‘‘யானை ஓர் தாவர உண்ணி. அவற்றுக்கு மனிதன் உள்பட யாரையும் கொல்லக்கூடிய அவசியமில்லை. வளர்ப்பு பிராணிகள் திடீரென சீற்றமாகி தாக்குவது போல தான் யானையும் தாக்கியுள்ளது. இந்த யானை பிடிக்கப்பட்ட வளர்ப்பு யானையாகும். முதல் தலைமுறையாக வனப்பகுதியில் இருந்து மாறிவிட்ட சூழலில் பழக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. ஆனால், யானையின் காட்டுத்தன்மை அப்படியே தான் இருக்கும்.
காடுகளில் எப்படி நடந்து கொள்ளுமோ அதுபோல தான் சாதாரணமாக நடந்து கொள்ளும். ஏதோ ஒரு பிடிக்காத காரணத்தால், கட்டுப்படுத்த முடியாத திடீர் சீற்றத்தால் இதுபோன்ற எதிர்பாராத விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த பிறகு முதன்மை பாகன் யானையை லாவகமாக நடத்தியதும், யானை அமைதியாக இருந்ததைக் கவனிக்க முடிந்தது. யானைக்கு பயம், ஒலி, ஒளி, பட்டாசு சத்தம், வாசனை என ஏதோ ஒரு அசௌகர்யம் காரணமாக எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது. வன விலங்குகளை உரிய தொலைவில் இருந்து தான் பார்க்க வேண்டும். இந்த விபத்து ஏன் நடந்தது என்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.
யானை புத்துணர்வு முகாம்: 'ஓசை' அமைப்பின் தலைவர் காளிதாசன் கூறும்போது, “தாவர உண்ணியான யானை பிடிக்கப்பட்டு பழக்கப்பட்ட வளர்ப்பு யானையாகும். யானை பயந்து போன சூழலில், கோபத்தில்தான் தாக்கும். வளர்ப்பு யானைக்கு ஒருவித அழுத்தம் இருக்கும். வனத்தில் இருக்கும்போது தேடி சென்று உணவு சாப்பிடும். தண்ணீர் மிகவும் பிடிக்கும். ஆனால் வனத்தை விட்டு வெளியே வந்து நகர பகுதியில் இருக்கும் போது வெயில், தார் சாலையில் நடக்க வைத்தல், யானை மீது வண்ணங்களை பூசுதல் ஆகியவைகளை விருப்பத்திற்கு ஏற்ப செய்கிறோம். இவையெல்லாம் தான் அழுத்தமாக இருக்கும்.
ஆண் யானை மதம் பிடித்தால் இயல்பை மீறி நடந்து கொள்ளும். யானை மேலாண்மை செய்ய விதிமுறைகளை முறையாகப் பயன்படுத்த வேண்டும். சிறிய இடத்தில் அடைத்து வைத்திருக்க கூடாது. காற்றோட்டமான பகுதியில் பெரிய இடத்தில் யானை இருக்க வேண்டும். இதனை இந்து சமய நிலைய அறநிலையத்துறை நிதி ஒதுக்கி மேலாண்மை செய்ய வேண்டும். யானை புத்துணர்வு முகாம் தேவைப்பட்டால் அதிக தொலைவு அழைத்து வராமல் அருகே உள்ள பகுதிக்கு அழைத்து சென்று ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவுகளை வழங்கி பராமரிக்கலாம்” என்றார்.
பிரத்யேக உத்தரவு எதுவும் வரவில்லை: இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறை உயரதிகாரிகள் கூறும்போது, ‘‘கோயிலில் பராமரிக்கப்படும் யானைக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தேவைப்படும் சமயங்களில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. சத்தான உணவுகள், தீவனத் தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. தொடர்ச்சியாக யானைகளின் செயல்பாட்டை கண்காணித்து வருகிறோம். சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிக்கிறோம். பக்தர்களை யானைகளின் அருகே செல்ல அனுமதிப்பதில்லை. திருச்செந்தூரில் நடந்த நிகழ்வைத் தொடர்ந்து கூடுதல் வழிமுறைகளை பின்பற்றுங்கள் என இதுவரை எந்த புதிய அறிவிப்பும் அரசு சார்பில் தெரிவிக்கப்படவில்லை. எனவே, வழக்கமான கண்காணிப்பு முறைகளையே பின்பற்றி வருகிறோம்’’ என்றனர்.
பேரூர் பட்டீசுவரர் கோயில் யானை பராமரிப்பு: கோவை பேரூர் பட்டீசுவரர் கோயிலில் கல்யாணி என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறநிலையத்துறையினர் கூறும்போது, ‘‘தினமும் காலை கல்யாணி யானைக்கு குளிப்பாட்டப்படுகிறது. பின்னர் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு கஜபூஜை நடத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து உணவுகள் வழங்கப்படுகின்றன. 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு உடல்நலப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. தினமும் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. பக்தர்கள் யாரும் யானையின் அருகே அனுமதிக்கப்படுவதில்லை. தொலைவில் இருந்தே பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்’’ என்றனர்.
- ஆர்.ஆதித்தன், டி.ஜி.ரகுபதி