

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை மாவட்டத்தில் அதிகளவில் யானைகள், காட்டுமாடுகள், சிறுத்தை, மான்கள், காட்டுப்பன்றிகள் வசித்து வருகின்றன. மேலும் தமிழகத்திலேயே மனித-வன உயிரின முரண்பாடு அதிகமுள்ள பகுதியாகவும் அறியப்படுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலை கிராம பகுதிகளில் வனத்தை விட்டு வெளியேறும் வன உயிரினங்கள் குடியிருப்புகளிலும், விளை நிலங்களிலும் புகுந்து வருகின்றன. ஓராண்டுக்கு தோரயமாக 3 ஆயிரத்திற்கும் அதிகமாக யானைகள் வெளியேறி வருவதாக வனத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளன. ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் கொட்டப்படுகின்றன.இதனால் உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறும் யானைகள், காட்டுப்பன்றிகள், மான்கள் ஆகியவை குப்பைக் கிடங்கில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை உட்கொண்டு வருகின்றன. மேலும் யானைகள், காட்டுப்பன்றிகளின் எச்சத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. வனத்துறையினரும் குப்பைக் கிடங்கை அகற்ற சோமையம் பாளையம் ஊராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த வன விலங்கு ஆர்வலர்கள் மற்றும் வனத்துறையினர் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, வனவிலங்கு ஆர்வலர்கள் கூறும்போது, “மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில் சோமையம்பாளையம் ஊராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. இதனால் யானை, காட்டு மாடு, மான் போன்ற வன உயிரினங்கள் குப்பைக் கிடங்கில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை உண்கின்றன. இதனால், இக்குப்பைக் கிடங்கை அகற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும், கோடை காலத்தில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால், குப்பைக் கிடங்கை அகற்ற வேண்டும். இல்லையெனில் வன உயிரினங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும்” என்றனர்.