

மதுரை: மதுரை வைகை ஆற்றில் இருந்து சமீப காலமாக வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வருவது நிறுத்தப்பட்டுள்ளது. அதனால், நீண்ட காலமாக தேங்கி நிற்பதால் தெப்பக்குளம் தண்ணீர் நிறம் மாறி பச்சை நிறத்தில் காணப்படுகிறது.
மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம், தற்போது உள்ளூர் மக்களுக்கு முக்கிய பொழுதுப்போக்கு இடமாக திகழ்கிறது. கடந்த காலத்தில் ஏராளமான சினிமா திரைப்படங்கள் எடுக்கப்பட்டதால் இந்த தெப்பக்குளம் சுற்றுலாத் தலமாக புகழ்பெறத்தொடங்கியது. இடைப்பட்ட காலத்தில் வரத்து இல்லாமல் கடந்த ஐந்து ஆண்டிற்கு முன் வரை இந்த தெப்பக்குளம் நிரந்தரமாக வறட்சிக்கு இலக்கானது. இளைஞர்கள், மாணவர்கள் விளையாடும் மைதானமாகவும், ஆடு, மாடுகளுடைய மேய்ச்சல் நிலமாகவும் மாறியது. அதனால், இந்த தெப்பக்குளத்தின் அழகும், அதன் பராம்பரிய தோற்றமும் மாறியது.
கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சி சார்பில் வைகை ஆற்றில் இருந்து இந்த தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த தெப்பக்குளத்தின் பழைய கால்வாய்கள் ஆக்கிரமிப்பு எடுக்கப்பட்டு தூர்வாரப்பட்டது. வைகை ஆற்றில் தண்ணீர் வரும்போதெல்லாம், இந்த கண்மாய்க்கு நிரந்தரமாக தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால், தற்போது இந்த தெப்பக்குளம் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளித்தது. உள்ளூர் மக்கள், சுற்றுலாப்பயணிகள் இந்த தெப்பக்குளத்தின் அழகை கண்டு ரசிக்கும் வகையில் படகுப்போக்குவரத்து விடப்பட்டது.
இந்நிலையில் தற்போது மதுரை வைகை ஆற்றில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. ஆனால், வைகை ஆற்றில் இருந்து வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரவில்லை. அதனால், தெப்பக்குளத்தில் கடந்த பல மாதமாக தேங்கி நிற்கும் தண்ணீரால் தூர்நாற்றம் வீசுகிறது. தண்ணீரும் பச்சை கலரில் நிறம் மாறி உள்ளது. அதனால், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் வைகை ஆற்றில் இருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அனுப்பானடியை சேர்ந்த மோகன் கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டாகவே வைகை ஆற்றில் தண்ணீர் வந்தாலே தெப்பக்குளம் நிரம்பிவிடும். ஆனால், கடந்த மழைக்காலத்தில் இருந்தே ஆற்றில் தண்ணீர் வந்தால் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வருவதில்லை. இந்த தெப்பக்குளத்தில் தண்ணீர் இருந்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். கடந்த காலத்தில் பெரும் முயற்சி எடுத்து மாநகராட்சி தெப்பக்குளத்தின் நீர் வழித்தடங்களை கண்டறிந்து ஆற்றில் இருந்து நிரந்தரமாக தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.