

கோவை: அண்மைக்காலமாக கருங்காலி மாலை அணிந்தால் அதிர்ஷ்டம் வரும், ஆன்மிக பலம் பெருகும், தீய சக்திகள் விலகும் என பரப்பப்படும் தகவலால் சினிமா நட்சத்திரங்கள் தொடங்கி பல தரப்பு மக்களும் ஆன்லைனிலும், கடைகளிலும் வாங்கி பயன்படுத்தி வருவதைக் காண முடிகிறது.
நிஜமான கருங்காலி மரங்கள் கிளைகள் குறைவாகவும், நேராகவும், உறுதியான வைரம் பாய்ந்த மரமாகவும், மிகவும் விலை மதிப்புள்ளதாகவும் உள்ளன. இது ஒருபுறமிருக்க அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை கருங்காலி மரத்தைப் பாதுகாக்கும் ஆராய்ச்சியில் கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் (ஐஎஃப்ஜிடிபி) ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து, ஐஎஃப்ஜிடிபி நிறுவனத்தின் விஞ்ஞானி அர்ச்சனா கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் பசுமை மாறா காடுகள் மற்றும் இலையுதிர் காடுகளில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் ஓங்கி உயர்ந்து நிற்கும் தன்மையுடையது கருங்காலி மரம் (டயஸ்பைரோஸ் எபினம்) ஆகும்.
தமிழகத்தில் ஆனைமலை, திருமூர்த்தி மலை, கொல்லிமலை, களக்காடு முண்டந்துறை ஆகிய மலைப் பகுதிகளில் கருங்காலி மரங்கள் இயற்கையாக வளர்ந்து வருகின்றன. கருங்காலி மரம் முழுவதும் வைரம் பாய்ந்து காணப்படும். இந்த மரம் உலக இயற்கை பாதுகாப்புக்கான அமைப்பால் (ஐயுசிஎன்) அழிந்துவரும் மரங்களின் சிவப்பு பட்டியலில் (ரெட் லிஸ்ட்) வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மரத்தைப் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவும், விலைமதிப்புள்ளதாக இருப்பதாலும் ஆய்வு செய்ய தொடங்கினோம். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆனைமலை பகுதிகளில் வளர்ந்திருந்த நூற்றுக்கணக்கான கருங்காலி மரங்களில் இருந்து தரமான சிறப்பு பண்புகள் உடைய 10 மரங்களை தேர்ந்தெடுத்தோம்.
பின்னர் அந்த மரங்களில் இருந்து விதைகளை சேகரித்தோம். அதேபோல நுனி கிளைகளையும் சேகரித்து, நாற்றுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். இதில் தரமான விதைகளில்இருந்து செழிப்பான முறையில் நாற்றுகள் வளர்ந்துள்ளன. இந்த நாற்றுகளை அடுத்து திசுவளர்ப்புமுறையில் பெருக்கம் செய்து விவசாயிகளுக்கு வழங்கதிட்டமிட்டுள்ளோம். மாறாக நுனி கிளைகளில்இருந்து செடிகள் எதிர்பார்த்தபடி துளிர்க்கவில்லை. தொடர்ந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, ஐஃஎப்ஜிடிபி-யின் விரிவாக்கத் துறை விஞ்ஞானி சரவணன் கூறியதாவது: இந்தியாவை தாயகமாகக் கொண்ட விலை மதிப்புள்ள மரங்களை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் கண்டறிந்து வருகிறது. அதில் இருந்து விதைகள், நுனி கிளைகளை சேகரித்து நாற்றுகளை வளர்த்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். நாற்றுகள் அதிகம் தேவைப்படும்போது திசு வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.
மரங்கள் வளர்ப்பு மூலம் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும். அந்தவகையில் விலைமதிப்புள்ள, உறுதியான தன்மையுடைய மரமாக உள்ள கருங்காலி மரத்தை ஆய்வு செய்தோம். இந்த மரம் கருப்பு நிறமாகவும், மரம்முழுவதும் வைரம் பாய்ந்தும் இருக்கும். எப்படி வேம்பு, தேக்கு மரங்களில் பல சிற்றினங்கள் உள்ளதோ அதுபோல கருங்காலி மரங்களிலும் பல சிற்றினங்கள் உண்டு.
கருவேல மர குடும்பத்தைச் சார்ந்த அகாசியா கேட்டச்சு (அல்லது செனாகலியா கேட்டச்சு) என வேறு சிற்றின மர வகைகளும் உண்டு. இம்மரத்தையே கருங்காலி மரம் என கூறி மாலைகளை செய்து விற்பனை செய்து வருகின்றனர். அழிவின் விளிம்பில் உள்ள கருங்காலி மரங்களையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.