

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளைத் தேடி பல்லாயிரக்கணக்கான அன்றில் பறவைகள் வடமாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வலசை வந்துள்ளன.
டெல்டா மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்கும். அதேநேரத்தில், காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் டெல்டா மாவட்டங்களில் உள்ள வயல்களில்பாய்ந்து, ஏரிகள், குளங்கள், குட்டைகளில் நிரம்பிக்காணப்படும். டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகள் அதிகம் உள்ளதால், பறவைகளுக்குத் தேவையான உணவான பூச்சியினங்கள், நத்தைகள், மீன் குஞ்சுகள் உள்ளிட்டவை ஏராளமாக இருக்கும். இவற்றைப் பிடித்து உட்கொள்ள உகந்த காலம் என்பதால், ஏராளமான பறவை இனங்கள் வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு செப்டம்பர் மாத இறுதியில் வலசை வருவது வழக்கம்.
இங்கு வலசை வரும் பறவை இனங்கள் இங்கேயே தங்கி முட்டையிட்டு, குஞ்சு பொரித்த பின்னர், மீண்டும் அவை தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லும். நாடு விட்டு நாடு வலசை வரும் பறவை இனங்களுக்கு மத்தியில், தற்போது வடமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான கருப்பு நிறம் கொண்ட அன்றில் பறவைகள் கூட்டம் கூட்டமாக தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளுக்கு வலசை வந்துள்ளன. இந்தப் பறவைகள் உணவைத் தேடி வயல்கள், ஏரி, குளங்களில் குவிந்து காணப்படுகின்றன.
குறிப்பாக, தஞ்சாவூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சமுத்திரம் ஏரி,அல்லூர் ஏரி, கள்ளப் பெரம்பூர் ஏரி பகுதிகளிலும், சம்பா சாகுபடி நடைபெறும் வயல் பகுதிகளிலும் அன்றில் பறவைகள் பெரும் கூட்டமாகக் காணப்படுகின்றன. பகல் நேரங்களில் உணவு உட்கொள்ளும் இந்தப் பறவையினங்கள் மாலைப் பொழுதில் கூட்டம் கூட்டமாக வானில் ஓவியங்கள் வரைந்ததுபோல பறந்து, பெரியபெரிய மரங்கள் உள்ள பகுதிக்குச் சென்று இரவில் தஞ்சமடைகின்றன. அந்த வகையில், இவை மரங்கள் நிறைந்த பகுதிகள், ஒலி மாசு இல்லாத கிராமப்புறங்களில் உள்ள பெரிய மரங்களுக்கு சென்று தங்குகின்றன.
சுமார் 3 கிலோ எடை வரை உள்ள இந்த பறவைகள் கருப்பு நிறத்திலும், நீளமான மூக்குடனும் இருப்பதால், பொதுமக்கள் இவற்றை வியந்து பார்க்கின்றனர். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட வனத் துறை அதிகாரிகள் கூறும்போது, "அன்றில் பறவைகள் குறிப்பிட்ட ஒரு நாட்டிலிருந்து வருவது இல்லை. இந்தப் பறவைகள் எல்லா நாட்டிலும் உள்ளன. இந்தியாவில்ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் அதிகம் உள்ளன.
கூட்டம் கூட்டமாக வசிக்கும் இந்த அன்றில் பறவைகள், டெல்டா மாவட்டங்களுக்கு செப்டம்பர் மாதம் வருகைதரும், பிப்ரவரி மாதம் வரை தங்கியிருக்கும். இந்த காலக்கட்டத்தில் டெல்டாவில் நெல் சாகுபடி நடைபெறும் என்பதால், நீர்நிலைகளில் அதிக தண்ணீர் இருக்கும். இந்த நீரில் வாழும் மீன்கள், பூச்சியினங்களை அன்றில் பறவைகள் விரும்பி உட்கொள்ளும். இனப்பெருக்க காலம் முடிந்த பின்னர், இந்த பறவைகள் மீண்டும் வடமாநிலங்களுக்கு சென்றுவிடும்" என்றனர்.