

சமீபத்தில் மறைந்த விவசாயி தாதாஜி கோப்ரகடேவுக்கு இருந்தது ஒரு திட்டு அளவு நிலம்தான். அந்த வயலின் விளிம்பில் அவரது சிறிய வீடு உள்ளது. அந்த வீட்டின் மேடும் பள்ளமும் விரிசலுமாகக் காணப்படும் சுவர்களில், அவர் பயிரிடும் நெல் விதைகளின் மாதிரிகள் அவற்றின் பெயர்களுடன் படச்சட்டங்களாகத் தொங்கவிடப்பட்டுள்ளன. தலித் மக்கள் அதிகம் வசிக்கும் மராத்திய கிராமமான நான்டெட்டில் பிறந்த தாதாஜி கோப்ரகடே, வீரியம்மிக்க ஒன்பது புதிய நெல் விதைகளை உருவாக்கியவர்.
1983-ம் ஆண்டில் அப்போது மிகவும் பிரபலமாக இருந்த அரிசி வகையான ‘பட்டேல் 3’ ரகத்தையே கோப்ரகடேவும் தனது வயலில் விதைத்து வெள்ளாமை செய்து வந்தார். அதே நிலத்தில் தோற்றத்தில் வித்தியாசப்பட்டிருந்த நெல் நாற்றுகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைப் படிப்படியாகப் பயிர் செய்யத் தொடங்கினார். ஒருகட்டத்தில் மற்ற விவசாயிகளுக்கும் தனது விதை நெல்லைத் தாராளமாக அளித்தார்.
கோப்ரகடே உருவாக்கிய விதை நெல்லுக்குப் பெயர் வைத்தவர் நிலச்சுவான்தாரான பீம்ராவ் ஷிண்டேதான். கோப்ரகடேயிடம் விதை வாங்கிய முதல்முறை, அவரது நிலத்தில் எதிர்பாராத அளவு நெல் சாகுபடி கிடைத்தது. கோப்ரகடே கொடுத்த விதைநெல்லில் விளைந்த அரிசியில் தனி நறுமணமும் இருந்தது.
பீம்ராவ் ஷிண்டே, கோப்ரகடேயின் விதை நெல்லைச் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்க முயன்றபோது, அதன் பெயர் என்னவென்று வியாபாரிகள் கேட்டார்கள். அப்போது பிரபலமாக இருந்த ‘எச்.எம்.டி.’ கடிகாரத்தின் பெயரை ஷிண்டே சொன்னார். அப்படித்தான் எச்.எம்.டி. என்று அதற்குப் பெயர் ஏற்பட்டது. ருசிக்கும் மணத்துக்கும் குறியீடாக எச்.எம்.டி. ஆகிவிட்டது.
எச்.எம்.டி. விதை நெல்லை உருவாக்கியபோது அதைப் பதிவு செய்வதற்கான நெறிமுறைகள்கூட அப்போது உருவாகவில்லை. தனது மகனின் சிகிச்சைக்காக தன்னிடமிருந்த இரண்டு ஏக்கர் நிலத்தையும் விற்றுச் செலவு செய்த பிறகு, தான் வேலை செய்து வந்த உறவினர் நிலத்திலிருந்துதான் எச்.எம்.டி. விதை நெல்லை அவர் உருவாக்கியிருந்தார். அத்துடன் உழவுப் பணிகள் இல்லாத நாட்களில் கூலிவேலைக்கும் சென்று வந்தார். 2005-ம் ஆண்டு ‘தேசிய புதுமைக் கண்டுபிடிப்புகள் அறக்கட்டளை’ (நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன்) அமைப்பு அவருக்கு விருது வழங்கியிருந்தது. அவருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜித் பவார் 2014-ம் ஆண்டில் ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்கினார்.
அவரது வாழ்நாளின் பிற்பகுதியில் நிறைய அங்கீகாரங்களும் நிதியுதவிகளும் கிடைத்தாலும், அவர் உருவாக்கிய எச்.எம்.டி. விதை ரகத்தை ‘பஞ்சப்ராவ் தேஷ்முக் கிரிஷி வித்யாபீடம்’ என்ற வேளாண்மைப் பல்கலைக்கழகம் எடுத்துக்கொண்டு தனது பெயரில் அதை வெளியிட்ட விஷயம், அவரைக் கடைசிவரை வருத்தியது.
1994-ம் ஆண்டு, அந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து வந்த ஒருவர், சோதனை செய்வதற்கென்று கூறி கோப்ரகடேவிடமிருந்து ஐந்து கிலோ எச்.எம்.டி. அரிசியைப் பெற்றுச் சென்றார். நான்காண்டுகள் கழித்து, 2000-வது ஆண்டில், கோப்ரகடேயின் ஒப்புதலின்றி ‘பி.கே.வி. எச்.எம்.டி.’ என்ற பெயரில் புதிய அரிசி சந்தைக்கு வந்தது.
இதுபோன்ற ஏமாற்றங்கள் இருந்தாலும், கோப்ரகடே மேலும் ஒன்பது விதைநெல் ரகங்களை உருவாக்கினார். அவற்றில் எச்.எம்.டி. மற்றும் டி.ஆர்.கே. விதைநெல் வகைகளுக்கு 2012-ல் புதுடெல்லியில் உள்ள ‘தாவர வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமைப் பாதுகாப்புச் சட்ட ஆணையம்’ அங்கீகாரம் அளித்தது. ‘பி.கே.வி. எச்.எம்.டி.’ என்ற பெயரில் ஏற்கெனவே பதிவு இருந்ததால், அவர் கண்டுபிடித்த வகைக்கு ‘தாதாஜி எச்.எம்.டி.’ என்று அங்கீகாரம் கிடைத்தது.
இரண்டு நெல்விதைகளைப் பதிவுசெய்து, ஒவ்வொன்றுக்கும் 50 ஆயிரம் ரூபாய் வீதம் தேசிய புதுமைக் கண்டுபிடிப்புகள் அறக்கட்டளை அளித்தது. அவரது பணிகளுக்காக 10 லட்ச ரூபாய் கடனாக அளிக்கப்பட்டது. ஏழு லட்ச ரூபாய் கடனை முறையாகத் திரும்பச் செலுத்த முடிந்த அவரால், பயிர்கள் பொய்த்துப் போனதன் காரணமாக கடைசி தவணையான ரூ. 3 லட்சத்தைக் கட்ட முடியவில்லை.
விதை நெல்லை உருவாக்கும் தனது முறையைத் தொழில்நுட்ப ரீதியாக இன்னொரு தனியார் நிறுவனத்துக்கு மாற்றுமாறு அந்த அறக்கட்டளை ஆலோசனை கூறியது. ஆனால், அந்த ஆலோசனைக்கு கோப்ரகடே எப்போதும் எதிராகவே இருந்தார்.
79 வயதில் காலமான கோப்ரகடே, இந்தியாவின் பெரும்பாலான விவசாயிகளையும் போலவே, மகிழ்ச்சியற்றும் கடனாளியாகவும் ஏழையாகவும் இறந்துபோனார். அவர் உருவாக்கிய முதல் விதை நெல்லான எச்.எம்.டி.யை அவரால் கடைசிவரை மீட்கவே முடியவில்லை.
சென்னையிலும் எச்.எம்.டி. அரிசி
சென்னை இயற்கை அங்காடிகள் சிலவற்றில் கோப்ரகடே உருவாக்கிய எச்.எம்.டி. இயற்கை உற்பத்தி அரிசி விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, அடையாறை மையமாகக் கொண்ட ‘ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்கெட்’ எனப்படும் ஓ.எஃப்.எம். சங்கிலித் தொடர் கடைகளில் இந்த அரிசியை வாங்கலாம்.
நன்றி: தி இந்து பிஸினஸ்லைன் | தமிழில்: ஷங்கர்