Last Updated : 02 Jun, 2018 11:32 AM

 

Published : 02 Jun 2018 11:32 AM
Last Updated : 02 Jun 2018 11:32 AM

உயிர்ப்பலி கேட்கும் வளர்ச்சிப் பேய்: சுற்றுச்சூழல் போராட்டங்கள் நேற்றும் இன்றும்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 என்று அரசு அறிவித்தாலும், பலியானோர் எண்ணிக்கை குறித்து உள்ளூர் மக்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது. மண்ணைக் காக்கவும் நீரைக் காக்கவும் உறுதி ஏற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் அரசுகள், பின்னர் அதை காசுக்கு விற்கும் வித்தையைத் தெரிந்துகொண்டதன் விளைவாக, எளிய மக்கள் உயிரிழக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.

உலகம் முழுவதும் சூழலியலைப் பாதுகாக்கப் போராடும் போராளிகள் இதுபோல எண்ணற்று பலியாகி வருகின்றனர். மெக்சிகோவில், பிலிப்பைன்ஸில், கொலம்பியாவில், இந்தியாவில் என்று பட்டியல் நீண்டு செல்கிறது. 2015ம் ஆண்டில் மட்டும் இதுபோல 185 போராளிகள் கொல்லப்பட்டதாக 'டவுன் டூ எர்த்' இதழ் கூறுகிறது.

மரம் காக்கும் போராட்டம்

''தொடியுடைய தோண் மணந்தனன்

கடிகாவிற் பூச்சூடினன்'' (புறம்: 239)

காவல் மரங்களை கடி மரம் என்றும், அந்த மரங்கள் வளரும் காட்டை கடிகா என்றும் அழைப்பது பண்டைத் தமிழ் மக்களின் மரபு. தங்கள் உயிரைக் கொடுத்தும் மக்கள் அதைக் காப்பார்கள். ஒரு நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முதலில் கடிமரம்தான் வீழ்த்தப்படும். அதைக் காக்கும் போராட்டமே நாட்டின் இறையாண்மைக்கான போராட்டமாக அன்றைக்கு இருந்தது. நிலத்தை இயற்கையின் அடிப்படையில் பிரித்து வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.

பிற்கால வரலாற்றில் சூழலியலுக்கான போராட்டம் இந்தியாவில் 1730-களில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கேஜர்லி கிராமத்தில் தோன்றியது. மரங்களைக் காக்கும் போராட்டமாக அது இருந்தது. மரங்களை வெட்ட முனைந்த அரசுக்கு எதிராக 363 பிஷ்னோய் மக்கள் பலியானார்கள். அதன் பின்னர் 1856-ல் வடஅமெரிக்கப் பழங்குடிகளோடு நடந்த சியாட்டில் சண்டையில் 28 பேர் கொல்லப்பட்டார்கள். அப்போது சியாட்டில் தலைவர் வெளியிட்ட புகழ்பெற்ற கடிதம், அந்தப் போரை சூழலியல் போராட்டமாக உலகுக்குப் பறைசாற்றியது.

தொழிற்புரட்சி தந்த சீரழிவு

உலக வரலாற்றில் தொழிற்புரட்சி ஒரு மாபெரும் அருஞ்செயல் என்று நம்பப்பட்டுக்கொண்டிருந்த நாட்களில், இப்போக்கு கொடுமையான பேரழிவுகைளக் கொண்டு வரும் என்று யாரும் அப்போது எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இன்று உலகின் தலையாய சிக்கல்களில் ஒன்றாக சூழலியல் மாசுபாடு உள்ளது. நீர், நிலம், காற்று என்று வாழ்வாதாரங்களைச் சிதைத்துச் சூறையாடும் போக்கு உலகம் முழுவதும், அதிலும் குறிப்பாக வளரும் நாடுகளில் கண்மூடித்தனமாக அதிகரித்து வருகிறது. தங்கள் வாழ்வாதாரங்களான இயற்கை ஆதாரங்களைக் காப்பதற்காக உலகம் எங்கும் மக்கள் போராடி வருகிறார்கள்.

தொழிற்புரட்சியை முதலில் தொடங்கிய மேற்கத்திய நாடுகளில்தான் தொழிற்சாலை மாசுபாட்டுக்கு எதிரான போராட்டங்கள் முதலில் தொடங்கின. 1739-ல் பெஞ்சமின் பிராங்க்ளின் பிலடெல்பியாவில் தோல் தொழிற்சாலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். 1850-களில் தேம்ஸ் ஆற்றில் ஏற்பட்ட மாசுபாட்டை காரல் மார்க்ஸ் எதிர்த்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இது இன்னும் வேகமெடுத்தது. ரேச்சல் கார்சனின் 'மௌன வசந்தம்' நூல், சூழலியல் செயற்பாட்டாளர்களிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

யார் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்?

இயற்கையைக் காக்க வேண்டும், சூழலியலைப் பேண வேண்டும் என்ற நோக்கம் விரிவடைய விரிவடைய தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்டங்களாக அவை உருவெடுத்தன. ஒரு காலத்தில் ஆலைகள் வேண்டும் என்று கேட்ட மக்கள், இன்று தங்கள் பகுதிக்கு ஆலைகளே வேண்டாம் என்று வீறுகொண்டு எழுகிறார்கள். லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட தனியார்மயமும் கட்டற்ற பொருளாதாரப் போக்கும் இயற்கை வளங்களை எந்த வரம்பும் அற்று சூறையாடுவதே இதற்குக் காரணம்.

சூழலியல் அநீதியை எதிர்ப்பவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு அழித்தொழிக்கப்படுகிறார்கள். ஆண்டுக்கு ஆண்டு சூழலியல் போராளிகள் கொல்லப்படுவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் வாரத்துக்கு நான்கு போராளிகள் கொல்லப்படுகிறார்கள் என்கிறது கார்டியன் இதழ்.

தமிழகத்தைப் பொறுத்த அளவில் மாவட்டம்தோறும் சூழலியல் போராட்டங்கள நடைபெற்று வருகின்றன. காரணம் இந்தியாவின் அதிகம் நகரமயமான மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பதுதான். குடிநீர் ஆதாரங்களைக் காக்கும் போராட்டங்கள் தொடங்கி சாயப்பட்டறைகள், தோல் பதப்படுத்தும் ஆலைகள், தாமிர உருக்காலைகள், ரசாயன தொழிற்பேட்டைகள் என்று இந்தப் போராட்டங்கள் தொடர்கின்றன.

தமிழக சுற்றுச்சூழல் போராட்டங்கள்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மட்டுமல்லாது, அனல் மின்நிலையம் போன்ற மேலும் பல மாசுபடுத்தும் தொழிற்சாலைகளும் உள்ளன. இதற்கு எதிரான போராட்டங்கள் நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றன. அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி-குமரி மாவட்டங்களில் ஆற்று மணல், கடல் மணல் பாதுகாப்புக்கும், துறைமுக கட்டுமானத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் விரிகின்றன. தேனியில் நியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம்; கொடைக்கானலில் இந்துஸ்தான் லீவரின் பாதரசக் கழிவை எதிர்த்துப் போராட்டம்;

திண்டுக்கல்லில் தோல் பதப்படுத்தும் ஆலைகளை எதிர்த்து போராட்டம்; ஈரோட்டு-கரூரில் காவிரி, அமராவதி ஆறுகளை மாசுபடுத்தும் சாயப்பட்டறைகள், திருப்பூரில் நொய்யலைத் தின்று தீர்த்த சாயப்பட்டறைகளை எதிர்க்கும் போராட்டம்; அரியலூரில் சிமெண்ட் ஆலைகளின் மாசுபாட்டுக்கு எதிரான குரல்; மதுரையில் சிறுமலைகளைக் காக்கப் போராட்டம்; கோவை - நீலகிரியில் காடுகளைக் காக்கப் போராட்டம்; நாமக்கல், சேலம் பகுதிகளில் சுரங்கத் தொழில்களால் வளமான மலைகள் அழிவதை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்கள்;

வாழ்வதற்குத் தகுதியற்றதாக கடலூரை மாற்றியுள்ள சிப்காட் வளாகத்தை எதிர்க்கும் போராட்டம்; தஞ்சை -புதுக்கோட்டையில் ஹைட்ரோகார்பன் ஆழ்குழாய்க் கிணறுகள் பெட்ரோலியக் கிணறுகளுக்கு எதிரான போராட்டங்கள்; நாகையிலும் திருவாரூரிலும் இறால் பண்ணைகளுக்கு எதிரான போராட்டங்கள்; தருமபுரி - கிருஷ்ணகிரி பகுதிகளில் மலைகளைக் காக்கப் போராட்டம், வேலூரில் தோல் பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராகவும் பாலாற்றையும் காக்கும் போராட்டங்கள்;

சென்னையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் முதல் சாக்கடைக் கழிவு மட்டுமல்லாது ரசாயனத் தொழிற்சாலைகளை எதிர்க்கும் போராட்டங்கள் என்று போராட்டங்களை சுருக்கமாகப் பட்டியல் இடலாம்.

இவை தவிர தமிழகமெங்கும் பரவலாக மாசுபடுத்தும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு எதிரான போராட்டங்கள், நெகிழியை வரைமுறையில்லாமல் கொளுத்தும் அரசு அமைப்புகளுக்கு எதிரான போராட்டங்கள், மலைபோல் குவியும் திடக் கழிவுகள், ஆறுகளை கொன்று சீரழித்த சாக்கடைக் கழிவுகள் என்று தமிழகம் முழுமையும் போராட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தப் பட்டியலில் இடம்பெறாத போராட்டங்களும் நிறைய உள்ளன.

போராட்ட முன்னோடிகள்

தமிழகத்தில் சூழலியல் போராட்டங்கள் முதலில் பறவைப் பாதுகாப்பு, கானுயிர் பாதுகாப்பு என்று மேட்டுக்குடிப் போக்காக இருந்தது. பிறகு குடிநீருக்கான போராட்டமாகவும், வேளாண்மை நிலங்களைப் பாதுகாக்க வேண்டியுமாகவே தொடங்கின. தமிழகத்தைப் பொருத்தவரை சூழலியல் போராட்டங்களுக்கு ஒரு மெய்யியல் வரைவாக்கத்தைக் கொடுத்தவர்கள் மறைந்த நெடுஞ்செழியன் ஒருங்கிணைத்த ‘பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு;

மருத்துவர் ஜீவானந்தத்தை தலைவராகக் கொண்ட தமிழகப் பசுமை இயக்கம்; செங்கல்பட்டு வெங்கடாசலத்தைத் தலைவராகக் கொண்ட கிழக்குமலைத் தொடர் பாதுகாப்பு இயக்கம்; சர்வோதயத் தலைவர் ஜெகன்னாதனைத் தலைவராகக் கொண்ட இறால் பண்ணை எதிர்ப்பு இயக்கம் போன்ற இயக்கங்கள் சூழலியல் போராட்டங்களை தமிழகத்தில் முன்னெடுத்த முன்னோடிகள்.

இதில் தொண்டு நிறுவனங்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திண்டுக்கல் பால் பாஸ்கரால் தொடங்கப்பட்ட 'சுற்றுச்சூழல் புதிய கல்வி' மாத இதழ் ஆரம்ப காலத்தில் முக்கிய பங்காற்றியது. மருத்துவர் ச. ராமதாஸால் ஒருங்கிணைக்கப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு கடலூர் சிப்காட் மாசுபாட்டுக்கு எதிராகவும் பாலாற்றைப் பாதுகாக்கவும் போராடியது. பின்னர் பெருவீச்சாக உருவான கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டம், இந்திய அணுவுலை வரலாற்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. மறைந்த ஒய்.டேவிட் இப்போராட்டத்தின் முன்னோடியாக இருந்தார். சுப.உதயகுமாரின் வருகைக்குப் பின்னரே இப்போராட்டம் வீறுகொண்டு எழுந்தது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோக் குளிர்பான நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தில் காந்தியவாதிகள் முதல் மார்க்சிய/லெனினிய அமைப்புகள்வரை போராடி வெற்றி பெற்றனர். சேலத்தில் பியூஷ் மானுஷ் வேடியப்பன் மலையைக் காக்கப் போராடி வருகிறார்.

தஞ்சை தரணியில் நடைபெற்ற மீத்தேன் எதிர்ப்புப் போராட்டக் களத்தில்தான் நம்மாழ்வார் தனது உயிரை ஈந்தார். தாமிரபரணி மணல்கொள்ளையைத் தடுக்கப் போராடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, கரூர் காவிரி ஆற்றில் மணல்கொள்ளையைத் தடுக்கப் போராடும் முகிலன், கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலைக்காகப் போராடும் 'ஓசை' காளிதாஸ், மதுரையில் நீர்நிலைகளைக் காக்கப் போராடும் நாணல் நண்பர்கள் தமிழ்தாசன், திருச்சியில் போராடும் தண்ணீர் அமைப்பினர், சிதம்பரத்தில் கான்சாகிப் வாய்க்காலை காக்கப் போராடிக்கொண்டிருக்கும் பாசன விவசாயிகள் அமைப்பான ‘சகாப்' என்று தமிழகம் முழுவதும் சூழலியலைக் காக்கப் போராடுபவர்களின் பட்டியலும் நீண்டுகொண்டே போகிறது.

இதுபோல முகம் தெரிந்த, தெரியாத எத்தனையோ செயற்பாட்டாளர்கள் தங்களது உடைமையை, சில நேரங்களில் உயிரையும் இழந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இறால் பண்ணை எதிர்ப்புப் போராட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் செயற்பாட்டாளர்கள் தீர்ப்பைப் பெற்றும், அரசு நடைமுறைப்படுத்தாமல் விட்ட நிகழ்வுகளும் உண்டு. திண்டுக்கல், வாணியம்பாடி தோல் ஆலைக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுக்க வலியுறுத்தி தீர்ப்பு வழங்கப்பட்டும், இழப்பீடு முறையாகக் கொடுக்கப்படவில்லை. அதனால் சுற்றுச்சூழல் போராட்டங்களுக்கு நீதிமன்றம் வழியாகத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பொய்த்துப் போகிறது.

பாடம் கற்போம்!

இன்று எண்ணற்ற சூழலியல் செயற்பாட்டாளர்கள் உருவாகி வருகின்றனர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு சூழலியல் போராட்டங்கள் பெருவீச்சாக வளர்ந்தாலும், அவற்றுக்குக் கிடைத்த வெற்றியோ மிகவும் குறைவுதான். சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு மக்கள் கொடுக்கும் விலை அளப்பரியது.

சுற்றுச்சூழல் போராட்டங்கள் ஒரு புதிய உலகத்தைப் படைக்க வேண்டிய கட்டாயத்தை நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. புதிய கொள்கை, புதிய அரசுகள், புதிய வாழ்க்கை முறை உருவாக வேண்டிய காலம் இது. சூழலியல் பொருளாதார அறிஞர் ஜே.சி. குமரப்பா குறிப்பிடுவதுபோல புதைபடிவ எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட நாகரிகம் (Fossil fuel based civilisation) இனித் தொடர முடியாது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அடிப்படையாகக் கொண்ட புதிய நாகரிகம் வளர வேண்டியுள்ளது.

நம்மைவிட ஏழை நாடுகளான ஈகுவடாரும் பொலிவியாவும் அந்த வகையில் நமக்கு வழிகாட்டுகின்றன. அவை 'அன்னை பூமி உரிமைச் சட்ட'த்தை (Law of the Rights of Mother Earth) உருவாக்கியுள்ளன. அந்தச் சட்டத்தி்ன் வழியாக இயற்கை வளங்களைப் பாதுகாக்க முனைகின்றன. உலகுக்கு வழிகாட்ட வேண்டிய பெரிய நாடான நம் நாடோ, பல வகைகளில் பின்தங்கியுள்ளது. இனி தென்னமெரிக்க நாடுகளிடம் இருந்தாவது பாடம் கற்போம்.

கெடுவேளையாக நம் நாட்டு முக்கியக் கட்சிகள் எதுவும் இந்தப் போக்கைப் புரிந்துகொள்ளவில்லை. ஒன்று இந்தக் கட்சிகள் தங்களது கொள்கைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் அல்லது புதிய கட்சிகள் உருவாக வேண்டும். வழக்கமான அரசியல் கட்சிகளை, அது தேசியக் கட்சிகளாக இருந்தாலும், திராவிடக் கட்சிகளாக இருந்தாலும், பொதுவுடமைக் கட்சிகளாக இருக்கட்டும் ஏன் மக்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதை இந்தப் பின்னணியில் இருந்தே புரிந்துகொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரங்களான இயற்கையைக் காக்க இந்தக் கட்சிகள் கொண்டுள்ள புரிதல் என்ன? வெறும் வளர்ச்சி என்ற முழக்கம் நிறுத்தப்பட்டு.

இயற்கை ஆதாரங்களைக் காக்கும் வகையில் அரசின் கொள்கைகளிலும் கட்சிக் கொள்கைகளிலும் மாற்றம் ஏற்பட்டால் ஒழிய, சுற்றுச்சூழல் போராட்டங்களால் ஏற்படும் உயிர் பலிகள் ஓயாது. இனி தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்வோம், தப்பித் தவறும்போது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம். நமது தலைமுறை இன்னும் நன்றாக வாழ வேண்டும், இந்தப் பூமி நமக்குப் பின்னும் இருக்க வேண்டுமல்லவா!

கட்டுரையாளர்,சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x