கடல் உயிரினங்களை பாதுகாக்க ராமேசுவரம் கடலுக்கு அடியில் செயற்கை பவளப் பாறைகள்!

ராமேசுவரம் கடற்பகுதியில் அமைக்கப்படும் செயற்கை பவளப்பாறைகள்.
ராமேசுவரம் கடற்பகுதியில் அமைக்கப்படும் செயற்கை பவளப்பாறைகள்.
Updated on
2 min read

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் 117 வகையான பவளப்பாறைகள் உள்ளன. கடல்பசு, டால்பின், சுறா, திமிங்கலம் உள்ளிட்ட பாலுட்டிகளும் 500-க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்களும் பவளப்பாறைகளை சார்ந்து வாழ்கின்றன.

மீன்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் விளங்கி வரும் பவளப்பாறைகள் கடலில் ஏற்பட்டுள்ள வெப்பமயமாகுதல், சூழலியல் மாற்றம், பவளப்பாறைகளை விற்பனைக்காக வெட்டி எடுப்பது, பிளாஸ்டிக் கழிவுகள், தடை வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது போன்ற காரணங்களால் அழியத் தொடங்கி உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் 2050-ம் ஆண்டுக்குப் பிறகு பவளப்பாறைகள் முற்றிலும் அழிந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதனால் அழிந்து வரும் பவளப்பாறைகளை பாதுகாக்கவும், கடல் வெப்பமயமாவதை தடுக்கவும், கடலில் பல்லுயிர் பெருக்கத்துக்காகவும் இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள், கடல்சார் ஆராய்ச்சி தன்னார்வலர்கள், கடல் ஆராய்ச்சி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ராமேசுவரத்தில் உள்ள சங்குமால், ஓலைகுடா, சம்பை, சேராங்கோட்டை, வடகாடு, ஏரகாடு உள்ளிட்ட கடலோர கிராமங்களில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்துக்காகவும், மீன்பிடித் தொழிலை மேம்படுத்தும் விதமாகவும் பிளான்ட் அமைப்பின் சார்பாக 3 ஏக்கா் பரப்பளவில் கடலுக்குள் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டது.

இதன் தொடக்க விழா, ராமேசுவரத்தில் உள்ள ஓலைக்குடா கடற்கரையில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட வனத் துறை அலுவா் ஹேமலதா தலைமை வகித்தார். மீனவளத் துறை துணை இயக்குநா் பிரபாவதி, ப்ளான்ட் நிறுவன இயக்குநா் ஜான்சுரேஷ், மேலாளா் ஜொ்மியா பண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து பிளான்ட் நிர்வாக இயக்குநர் ஜான் சுரேஷ் கூறுகையில், தமிழக கடற்பகுதியில் கடல் நீர் வெப்பமயமாகுதல் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக கடலில் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மீனவ கிராமங்களில் ஆய்வு செய்து தற்போது செயற்கை பவளப்பாறைகளை ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கடலுக்கு அடியில் சிமென்ட்டால் முக்கோணம், வட்டம், சதுரம், செவ்வகம், உருண்டை வடிவங்களில் அமைக்கப்பட்ட இந்த செயற்கை பவளப்பாறைகள் தொடர்ந்து 'ஸ்கூபா டைவர்ஸ்' மூலமாக கண்காணிக்கப்படும். சுமார் 6 மாதங்களில் இவற்றால் நல்ல பலன்கள் கிடைக்கும். இதனால் கடற்கரை ஓரங்களில் மீன்பிடியில் ஈடுபடும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன், மீன்களின் எண்ணிக்கை, பல்லுயிர் பெருக்கமும் பாதுகாக்கப்படும். தொடர்ந்து ராமேசுவரம் தீவைச் சுற்றி பல்வேறு இடங்களில் செயற்கை பவளப்பாறைகளை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in