கடலூர், தருமபுரி, தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: நீர்வள ஆதாரத் துறை தகவல்
சென்னை: தமிழகத்தில் கடந்த ஏப்ரலைவிட, மே மாதத்தில் கடலூர், தருமபுரி,தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சென்னை தவிர இதர 37 மாவட்டங்களிலும் பெய்யும் மழை அடிப்படையில் நிலத்தடிநீர்மட்டத்தை நீர்வள ஆதாரத் துறைகணக்கிடுகிறது. மாநிலத்தில் உள்ள 3,200-க்கும் மேற்பட்ட திறந்தவெளி கிணறுகள் (கண்காணிப்பு கிணறுகள்), 1,400-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக கணக்கிடப்படுகிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. இதுவரை இயல்புக்கும் அதிகமாகவே பருவமழை பெய்துள்ளது. கோடை மழையும் பரவலாக பெய்தது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, மே மாதத்தில் மாவட்ட வாரியாக கடலூரில் 0.54 மீட்டர், தருமபுரியில் 0.51 மீட்டர், தஞ்சாவூரில் 0.19 மீ.,மயிலாடுதுறையில் 0.13 மீ., கிருஷ்ணகிரியில் 0.11 மீ., கள்ளக்குறிச்சியில் 0.08 மீ., திருப்பத்தூரில் 0.08 மீ.நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மற்ற 30 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு அதிகபட்சமாக திருநெல்வேலியில் நிலத்தடிநீர்மட்டம் 1.28 மீ. உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்து, மயிலாடுதுறையில் 1.04 மீ. உயர்ந்துள்ளது. தஞ்சாவூரில் கடந்த ஆண்டு போலவே1.9 மீ. என்ற அளவில் உள்ளது.நாகப்பட்டினத்தில் 0.27 மீ., ராமநாதபுரத்தில் 0.36 மீ., தூத்துக்குடியில் 0.81 மீ., விருதுநகரில் 0.69மீ., தென்காசியில் 0.37 மீ. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வள ஆதாரத் துறை தெரிவித்துள்ளது.
